13-வது திருத்தம் குறித்து அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில்

இந்தியா வலியுறுத்தி வருகிற ஈழத் தமிழருக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து கொழும்பில் நேற்று அதிகாரப் பகிர்வு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜேவிபி தவிர பெரும்பாலான கட்சிகள் பங்கேற்றன. இலங்கை அனைத்து கட்சிக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது:-

போலீஸ் அதிகாரம் தவிர எஞ்சிய அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு கொடுக்க முடியும். இது தொடர்பாக அமைச்சரவையில் என்னுடைய தீர்வு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது போதுமானது அல்ல. அனைத்து தரப்பு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவாதிக்க வேண்டியதும் அவசியமாகும். இலங்கையின் மாகாண சபைகள் முழுமையாக செயல்பட முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் 9 மாகாண சபைகளில் 7ல் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். 2-ல் தமிழர் பெரும்பான்மையினர். மாகாண சபை முறை தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் தற்போதைய குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும். 13-வது திருத்தம் என்பது தமிழர் பெரும்பான்மையினராக வசிக்கும் மாகாண சபைகள் தொடர்பானது மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொருந்தக் கூடியது. ஆகையால்தான் இலங்கையின் அனைத்து தரப்பினருடன் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.