திண்டிவனத்தில் ஏரியில் பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
திண்டிவனம் நகரின் புறவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. உண்மையில் திண்டிவனத்தை சொந்த ஊராகக் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு இது மகிழ்ச்சியளித்திருக்க வேண்டும். மாறாக, இது மிகுந்த வருத்தத்தையும், சுற்றுச்சூழல் குறித்த கவலையையும் ஏற்படுத்துகிறது. அதை பகிர்ந்து கொள்ளவும், கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தக் கோருவதற்காகவும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
திண்டிவனம் நகரத்தின் தீராத சிக்கல்களில் மிகவும் முதன்மையானது பேருந்து நிலையம் தான். திண்டிவனத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள இந்திராகாந்தி பேருந்து நிலையம், 52 ஆண்டுகளுக்கு முன் 1971-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் திண்டிவனத்தின் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து பெருக்கத்தின் காரணமாக இந்திரா காந்தி பேருந்து நிலையம் பயன்பாடின்றி போய்விட்டது; பெயரளவில் மட்டுமே உள்ள பேருந்து நிலையம் எந்த நேரமும் இடிந்து விடக்கூடும். இந்திராகாந்தி பேருந்து நிலையத்திற்கு மாற்றாக புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக 1991-ஆம் ஆண்டில் தொடங்கி 2001, 2005, 2006, 2009, 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான இடங்கள் ஏரி நிலங்கள் தான். அதன் காரணமாகவே பல்வேறு நிலைகளில், பேருந்து நிலையம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலை அருகில் சர்வே எண்கள் 33/4, 36/5 ஆகியவற்றில் 6 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றன. இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றாலும் கூட, அதுவும் கூட ஏரி நிலம் என்பது தான் பெரும் கவலை அளிக்கிறது.
திண்டிவனம் புறவழிச்சாலையையொட்டி பேருந்து நிலையம் கட்டப்படும் பகுதி ஒரு காலத்தில் பல நூறு ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழ்ந்த ஏரி தான். இப்போது ஆவணங்களில் அது கட்டுமானத்திற்கு ஏற்ற நிலமாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, நடைமுறையில் அது ஏரி தான். ஒரு செ.மீ அளவுக்கு மழை பெய்தால் கூட, இப்போது பேருந்து நிலையம் கட்டப்படும் பகுதியில் பல அடி உயர்த்திற்கு மழை நீர் தேங்கி நிற்கும். அந்தக் காட்சிகளை நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். இப்போதும் கூட பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கு அருகில் ஏரி உள்ளது. அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு மழைக்காலங்களில் தண்ணீர் வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த ஏரியை ஆழப் படுத்தி, தூர்வாறும் பணிகள் ரூ.48 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் ஏரி என்ற நிலையில் இருந்து, இப்போது பேருந்து நிலையம் கட்டப்படும் இடம் எந்த வகையிலும் மாறவில்லை. இத்தகைய நிலத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டால், அதனால் இயற்கையான நீரோட்டத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை மாவட்ட நிர்வாகம் உணர வேண்டும்.
நீர்நிலைகளில் பேருந்து நிலையம், அரசு அலுவலங்களை கட்டுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தாங்கள் ஆட்சி செய்யும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் தான். இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு அலுவலர் குடியிருப்புகள், அவற்றுக்கு வெளியில் விழுப்புரம் பேருந்து நிலையம் என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதிகளுக்கு சில பத்தாண்டுகளுக்கு முன் ஒரே பெயர் தான். அந்த பெயர் பூந்தோட்டம் ஏரி. அந்த ஏரியில் 118.54 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து தான் இப்போதுள்ள அனைத்து கட்டிடங்களும் கட்டப்பட்டிருக்கின்றன என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் வரலாறாகும். ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று கொசு உற்பத்தி மையமாக மாறுவதையும், அங்கிருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் வெளியேறும் தண்ணீர் பேருந்து நிலையத்தில் நுழைந்து நீச்சல் குளமாக மாறுவதையும் தாங்கள் நேரடியாக பார்த்திருக்கக் கூடும். திண்டிவனத்தில் தற்போது கட்டபட்டு வரும் இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டால், அங்கும் அதே நிலை தான் ஏற்படும் என்பதை அரசு உணர வேண்டும்.
ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் எந்தவித கட்டுமானங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கின்றன. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்த வழக்கில் கடந்த 30.08.2022ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பின் சில பகுதிகளை மட்டும் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.. ”தமிழ்நாட்டில் எரிகளும், நீர்நிலைகளும் கண்மூடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால், தமிழ்நாடு பல நேரங்களில் வறட்சியும், சில நேரங்களில் அதற்கு முற்றிலும் மாறாக வெள்ளங்களையும் சந்தித்து வருவதை இங்கு சுட்டிகாட்டுவது பொருத்தமானதாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் காரணமாகத் தான் எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் மழைநீரை நீர்நிலைகளில் சேமிக்க முடிவதில்லை. அதற்கு முற்றிலும் மாறாக, ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால், தண்ணீரை சேமித்து வைப்பதற்கான பரப்பு இல்லாததால் வெள்ளம் ஏற்படும் நிலையைக் காண முடிகிறது. இந்த நேரத்தின் தேவை என்பது நீர்நிலைகள்/ ஏரிகளை பாதுகாப்பது தான். நாம் இயற்கையை கவனித்துக் கொண்டால், இயற்கை நம்மை கவனித்துக் கொள்ளும். இயற்கையை சரியாக கவனித்துக் கொள்ள மனிதகுலம் தவறியதால் புவிவெப்பமயமாதல் போன்ற தீமைகள் ஏற்படுகின்றன. இயற்கை மீது நாம் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தால், அது மனிதகுலத்தை பாதிக்கும். சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களின் வடிவங்களில் இப்போது அது தான் நடந்து கொண்டிருக்கிறது.” சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த வரிகள் திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கும் பொருந்தும்.
நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது ஓர் இயக்கமாகவே மாறி வரும் நிலையில், திண்டிவனத்தில் ஏரி நிலத்தில் பேருந்து நிலையம் கட்டும் முடிவை யார் எடுத்தது? நீர்நிலையை ஆக்கிரமித்து புதிய பேருந்து நிலையம் கட்டும் திட்டத்திற்கு யார் அனுமதி அளித்தது? நீர்நிலையில் பேருந்து நிலையம் கட்டுவது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டதா? பேருந்து நிலையம் கட்டப்படுவதால் அருகில் உள்ள ஏரிக்கு மழைநீர் செல்வதற்கான நீரோட்டம் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டனவா? வல்லுனர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டதா? என்பது குறித்து எனக்கு தாங்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று கோருகிறேன். திண்டிவனம் பேருந்து நிலையம் கட்டப்படும் நிலம் குறித்த சர்ச்சைகள் தீர்க்கப்படும் வரை புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.