மாநில இளைஞர்கள் திறமையானவர்கள். ஆனால் இங்குள்ள ராஜஸ்தான் அரசு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு சிகார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 1.25 லட்சம் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சல்பர் பூசப்பட்ட புதிய வகை யூரியாவான யூரியா கோல்ட்டை அறிமுகம் செய்தார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 14-வது தவணை தொகை சுமார் ரூ.17 ஆயிரம் கோடியை 8.5 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் விடுவித்தார். டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த இணையதள அமைப்பில் 1500 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை இணைக்கும் நடை முறையை தொடங்கி வைத்தார். சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீகங்கா நகர் ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரி களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் 7 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உதய்பூர், பன்ஸ்வாரா, பர்தாப்கர், துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களில் 6 ஏகலவ்யா மாதிரி உறைவிட பள்ளிகளை திறந்து வைத்த அவர், ஜோத்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா தீவ்ரி எனப்படும் சிறப்பு மையத்தையும் தொடங்கி வைத்தார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானுக்கு கடந்த 6 மாநிலங்களில் பிரதமர் மோடி 7-வது முறையாக பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராஜஸ்தான் சிகாரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை மக்களுக்கு எதிராக நீங்கள் எப்படி சதி செய்தீர்கள் என்பதை மறைக்க எதிர்க்கட்சியினர் தங்கள் பெயரை UPA-ல் இருந்து I.N.D.I.A என்று மாற்றிக்கொண்டனர். காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முந்தைய மோசடி நிறுவனங்களைப் போலவே தங்கள் பெயரை மாற்றியுள்ளன. அவர்கள் பயங்கரவாதத்தின் முன் படிந்த கறையை அகற்றுவதற்காக அவர்கள் தங்கள் பெயரை மாற்றியுள்ளனர். அவர்களின் வழிகள் நாட்டின் எதிரியைப் போலவே உள்ளன. இந்தியா என்ற பெயர் அவர்களின் தேசபக்தியைக் காட்டுவதற்காக அல்ல. மாறாக நாட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. ஆனால் ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது. மாநிலத்தில் காகித கசிவு நடக்கிறது. மாநில இளைஞர்கள் திறமையானவர்கள். ஆனால் இங்குள்ள அரசு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், ராஜஸ்தான் பயணத்தை முடித்துகொண்டு இன்று மாலை பிரதமர் மோடி குஜராத்துக்கு சென்றார். அங்கு ராஜ்கோட் நகர் அருகே புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். ரூ.1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையமாகும். ராஜ்கோட்டில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ஹிராசர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சர்வதேச விமான நிலையம், 2,534 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் இந்திய விமான நிலைய ஆணையம் 1,500 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை கட்டியுள்ளது. இந்த விமான நிலையம், 3,040 மீட்டர் (3.04 கிமீ) நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதையைக் கொண்டுள்ளது. அங்கு 14 விமானங்கள் எந்த இடத்திலும் நிறுத்தப்படலாம் என்று அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2017 ல், சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி நடத்தினார். இந்நிலையில், இன்று சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர், விமான நிலைய வளாகத்தில் நடந்து சுற்றிப்பார்த்தார். அதிகாரிகளிடம் வசதியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அறிந்து கொண்டார். மேலும், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.860 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். நாளை, குஜராத்தின் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமி கான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.