மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.
ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு இன்று தொடங்கியது. இதில் 12-வது மாநாட்டில் ஏற்பட்ட செங்கொடி விழுப்புரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு ராஜபாளையத்தில் 13-வது மாநாட்டு நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி கொடியேற்றி மாநாட்டு கொடியேற்றினார். மாநாட்டில் தியாகிகள் உருவப்படங்கள் திறக்கப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் சார்பில் ‘பறை இசை முழக்கம்’ நடைபெற்றது. மாநாட்டில் முன்னாள் எம்.பி லிங்கம் வரவேற்றார். இந்திய விவசாயிகள் தொழிற்சங்க பொதுச் செயலாளர் குல்சார் சிங் கொரியா தொடக்க உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது:-
ராஜபாளையத்தில் 13-வது மாநில விவசாய தொழிற்சங்க மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. 3ம் நாளான 30-ம் தேதி பொது கூட்டமும் பேரணியும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இரண்டாம் நாளில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பங்கேற்க உள்ளனர். விவசாய தொழிற்சங்க மாநில செயலாளர் பெரியசாமி தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாய தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து அறிக்கை தாக்கல் செய்கிறார். அதன்பின் அது குறித்த விவாதம் நடைபெற்று தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளது. தமிழகத்தில் தொழிலாளர் நலவாரியம் உள்ளது.
வேளாண் துறைக்கு தனி அமைச்சகமும், தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்வது வரவேற்புக்குறியது. ஆனால் ஒரு கோடிக்கும் மேல் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு என தனி துறையோ, வாரியமோ இல்லை. கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது விவசாய தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் வந்த அதிமுக அரசு நல வாரியத்தை கலைத்து விட்டு, கொண்டு வந்த முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் வெற்றியடையவில்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தது போல் விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கிராமப்புற ஏழை மக்களுக்கும் நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்து, திட்டத்தை முழுமையாக கைவிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இதுவரை எந்த குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை கிடைக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து, ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நிரந்தர வாழ்வாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வீடும், விவசாய நிலமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தில் தீண்டாமை நீக்கப்பட்டு விட்டாலும், இன்றும் நாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் கோயிலுக்கு செல்வதற்கு தடை, இரட்டை டம்ளர் முறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை முற்றிலும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. 30-ம் தேதி நடைபெறும் பொது மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து 50,000-க்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதில் எதிர்கால திட்டங்கள், போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
என்.எல்.சி மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் நிலத்தை கையகப்படுத்துவது மாநில அரசு தான். பயிர் சாகுபடி செய்துள்ள நிலங்களில் மூர்க்கத்தனமாக குழாய் அமைக்கும் பணிகளில் ஈடுபடுவது தவறானது. அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அறுவடை முடியும் வரை வாய்க்கால் வெட்டும் பணிகளை நிறுத்த வேண்டும். ராமேஸ்வரம் என்பது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் இடம். அண்ணாமலை யாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்கியது மூலம் பாஜகவிற்கான முடிவுரை எழுதப்பட்டு விடும் என்பதை காட்டுகிறது. விளம்பரத்துக்காகவே அண்ணாமலை யாத்திரை செல்கிறார்.
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. வருகின்ற நாடாமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. அவ்வாறு அமைந்தால் அது பாஜக-வின் பி டீமாக தான் இருக்கும். எத்தனை அணிகள் உருவானாலும் இந்திய கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகஸ்ட் 1-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். கோடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.