பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
திமுக இளைஞரணி கூட்டத்துக்கு வந்ததால் இளமையாக உணர்கிறேன். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சியின் இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை பார்க்கும்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு வயசு 70. ஆனால், இங்கே 20 மாதிரி நிற்கிறேன்.
234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்தியது உதயநிதியின் சாதனை. கடந்த 2 ஆண்டுகளாக, திமுகவை நோக்கி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. மாணவர்கள், இளைஞர்களிடம் திமுக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. திராவிட இயக்கத்தின் வரலாற்றை இளைஞர்களுக்கு சொல்லித்தர வேண்டும். திராவிட இயக்க வரலாறு மற்றும் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் வாரிசுகள் உருவாக வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒற்றைச் செங்கலை காட்டி பரப்புரை செய்தவர் உதயநிதி. உதயநிதி மேற்கொண்ட செங்கல் பிரசாரத்தை எதிர்கட்சிகளே மறக்கவில்லை. சேப்பாக்கம் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் அதிக பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி. 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தை நடத்தி காட்டினார் உதயநிதி. நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதியும், திமுக இளைஞரணியினரும் போராட்டம் நடத்தினர். கட்சிப் பணியிலும், ஆட்சி பணியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி.
இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இளைஞரணி செயலாளராக உதயநிதி பல்வேறு சாதனையை செய்து வருகிறார். இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து திமுகவை உதயநிதி பலப்படுத்தியுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் சுற்றி சுழன்று பணியாற்றினார் உதயநிதி. கட்சி, ஆட்சி இரண்டிலும் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தருகிறார் உதயநிதி. திமுக இளைஞரணி தீர்மானங்களை பார்க்கும்போது மிகுந்த நிம்மதி அடைகிறேன்.
நமது எதிரிகள் எந்த ஆயுதங்களை எடுக்கிறார்களோ.. அதை ஆயுதத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இது திராவிட மாடல் ஆட்சி. 100 ஆண்டுகளுக்கு முன்பு, எதற்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ.. அதைச் செயல்படுத்தும் ஆட்சி இது. பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகனின் நிழற்குடையில் அவர்களின் கருத்தியல் அடையாளமாக நிற்கிறேன். திராவிட மாடலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லவே ‘இந்தியா’ கூட்டணி. இருப்பினும், இந்தக் கூட்டணியின் பெயரைக் கேட்டாலே சிலருக்குப் பதறுகிறது. பாட்னா, பெங்களூர் கூட்டங்களை வெற்றி பெற்றுள்ளதைப் பார்த்து பயம் இதைப் பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மத்தியப் பிரதேசம், அந்தமான் என எங்குச் சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார். ஏதோ ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடைபெறுவதாகச் சொல்கிறார். உண்மையில் கோடிக்கணக்கான மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சி இது. உரிமை தொகை, இல்லம் தேடி மருத்துவம், என ஏகப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
அமைச்சர் உதயநிதி சொன்னது போல நேற்று அமித் ஷா இங்கு வந்து பேசியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா.. இனி பல மத்திய அமைச்சர்கள் வரிசையாகத் தமிழ்நாட்டிற்கு வருவார்கள்.
அமித் ஷா என்ன மத்திய அரசின் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கத் தமிழ்நாடு வந்தாரா.. இல்லை ஏற்கனவே அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்து வைக்க வந்தாரா.. அவர் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க வந்துள்ளார். அது பாத யாத்திரை இல்லை.. குஜராத்தில் 2002ஆம் ஆண்டிலும், இப்போது மணிப்பூரில் நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை தான் இது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு என்ன செய்தார். அங்கே அமைதி யாத்திரை நடத்த முடியவில்லை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தில் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்கவே அமித் ஷா இங்கு வந்துள்ளார்..
நேற்று வந்து திமுக குடும்ப கட்சி என்கிறார். இதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. வேறு எதாவது சொல்லுங்கள் என நானே கேட்கிறேன்.. எந்தவொரு பாஜக தலைவர்களின் வாரிசும் அரசியலில் இல்லை.. இருப்போர் அனைவரும் நாளையே விலகிவிடுவார்களா.. பதவியில் இருக்கும் பாஜக தலைவர்களின் வாரிசுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும். எனவே, வேறு எதாவது புதிதாகச் சொல்லுங்கள்.
2014-ல் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தவர்கள், இலங்கை பிரச்னை குறித்து பேச உரிமை உள்ளதா? அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித் ஷா பேசியுள்ளார். குற்ற வழக்கு உடையவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள், இது குறித்து பிரதமரிடம் அமித் ஷா கேட்பாரா?
பாஜக தங்கள் அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மிஷினாக அமலாக்கத் துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி முடியப் போகிறது. மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் சில மாதங்கள்தான். இந்தியாவுக்கு விடியல் பிறக்கப் போகிறது. இந்தியாவை காப்பாற்ற I.N.D.I.A-வுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.