அண்ணாமலை நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை: சீமான்

அண்ணாமலை நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அண்ணாமலை வேண்டும் என்றால் உடலைக் கொஞ்சம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவலாம் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது சிபிஐ ஊழல் வழக்கே இருக்கிறது. ஏன் அவர்களின் ஊழல் பட்டியலை எல்லாம் அண்ணாமலை வெளியிடவில்லை? ஒரு நேர்மையாளர் என்றால், அவர் அதிமுக ஆட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் இல்லையா? அதிமுக ஊழலை மறைத்துவிட்டு, வேறு பட்டியலை வெளியிடுகிறார். திமுகவிற்கு முன்னாள் ஆட்சியிலிருந்தது அதிமுகதானே? அதை மறைத்துவிட்டு, அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறது பாஜக. இதன் மூலம் அதிமுகவுக்கு ஒரு புனித பட்டம் கட்டப் பார்க்கிறார் அண்ணாமலை. அவர்களை எல்லாம் நேர்மையாளராகக் காட்ட முயல்கிறார் அண்ணாமலை. ஆகவே இந்த நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அண்ணாமலை வேண்டும் என்றால் உடலைக் கொஞ்சம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவலாம். நடப்பதால் சர்க்கரை குறையும். தினமும் உடற்பயிற்சி செய்ததை மாதிரியும் இருக்கும். இது எல்லாம் ரொம்ப பழைய மாடல் இது.

பத்து ஆண்டுகள் நாட்டை ஆளக்கொடுத்தோம். நாட்டையே பிச்சைக்கார நாடாக மாற்றிவிட்டீர்கள். பிறகு நடந்து என்ன பயன்வர போகிறது சொல்லுங்கள்? பாஜக அதிபர் ஆட்சியை நோக்கி நகர்கிறது. ஆகவே ஜனநாயக கட்சிகள் எதுவுமே இருக்கக் கூடாது. அனைத்தையும் ஒழித்துவிட வேண்டும் எனத் திட்டம் போடுகிறார்கள். ஒற்றைக் கட்சி ஆட்சி முறையைக் கொண்டுவரவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை. இவர்கள் இப்போது கொண்டுவர முயற்சிக்கும் பொது சிவில் சட்டம் என்பதே மனுதர்மத்தின் இன்னொரு வடிவம்தான். அம்பேத்கர் கொண்டுவந்த சட்டத்தைத் தள்ளிவிட்டு, இவர்கள் ஒரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.