இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என அவர் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறினார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்நிலையில் பேரறிவாளன் சார்பில் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு கூறியதாவது:

பேரறிவாளன் சிறையில் நிறைய டிகிரி படித்துள்ளார். அதிகாரிகளுடன் நன்னடத்தையாக இருந்துள்ளார். இதனை கருத்தில் கொண்டுதான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இன்னொரு விஷயம் என்னவென்றால் அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது? என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டு தான் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது அமைச்சரவை முடிவை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதனால் ஆளுநர் தனது பொறுப்பை தவறாக பயன்படுத்துகிறாரா? என்ற கோணத்திலும் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. கவர்னர் இரண்டரை ஆண்டுகளாக தீர்மானத்தை கிடப்பில் போட்டுள்ளதால் இதில் முடிவெடுப்பதாக கூறி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ன் கீழ் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் மருராம் வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு இதில் எந்த பங்கும் கிடையாது. மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள அனைவருக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும். இவர் பெயிலில் உள்ளதால் அப்படியே ரீலிஸ் செய்துவிட்டார்கள். இவருடைய மனுக்கள் 2016ல் இருந்து கிடப்பில் உள்ளதால் மற்றவர்களுக்கும் இதை பின்பற்றி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பார்கள் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.