தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது: அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்று 3-வது நாள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கினார். இதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 3-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் கூட்டத்தினரிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 70 ஆண்டு காலமாக தமிழக அரசியல் நிலவரத்தை நீங்கள் எல்லாம் தெரிந்திருப்பீர்கள். குறிப்பாக தி.மு.க. ஆட்சியை உன்னிப்பாக கவனித்திருப்பீர்கள். அவர்களின் ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்குமா? என்றால் கிடையாது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் இந்த மாவட்டத்தை தொடர்ந்து வறட்சியான மாவட்டமாகவே வைத்திருக்கிறார்கள். இதனால் பா.ஜனதா தொண்டர்களான நாங்கள் பாதயாத்திரையாக வந்து உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். அதாவது வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மோடியை வெற்றி பெறச் செய்து மீண்டும் பிரதமராக இந்த நல்ல ஆட்சியை தொடர செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் என் முன்பாக தாய்மார்கள், முதியவர்கள், பெண்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உள்பட பொதுமக்கள் மனதில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் பிரதிபலிக்கிறது.

ஒரே ஒரு குடும்பம் இரும்பு சிறையை போல தமிழகத்தை ஆட்டுவித்து கொண்டிருக்கிறது. ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சியாளராக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு குழந்தை படித்து, வளர்ந்து ஒரு நல்ல பதவிக்கு வர வேண்டும் என்றால் ஒரே குடும்பம் ஆட்சி செய்தால், அது சாத்தியம் ஆகாது. குடும்ப அரசியல் என்பது பொதுமக்களின் வளர்ச்சியை அடியோடு நாசப்படுத்தி விடும். கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் 3½ லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் என்று சொன்னார்கள். தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். தற்போது தி.மு.க. ஆட்சி அமைத்து 28 மாதங்கள் ஆகின்றன. இந்த நாட்களில் எத்தனை இளைஞர்களுக்கு நீங்கள் அரசு வேலை வழங்கி உள்ளீர்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன். குரூப்-4 தேர்வை நடத்திவிட்டு அதன் மூலம் 1,400 பேருக்கு கூட கடந்த ஓராண்டில் வேலை கொடுக்க முடியவில்லை. ஆனால் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுப்போம் என்று மோடி தெரிவித்தார். அதுபோல தற்போது வரை 5½ லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 4½ லட்சம் பேருக்கும் வரும் டிசம்பருக்குள் வேலை வழங்கப்படும். வருகிற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து சாயல்குடி, செல்வநாயகபுரம் ஆகிய இடங்களிலும் பொதுமக்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் மாலை பரமக்குடி சென்றார். முன்னதாக சாயல்குடி நோக்கி சென்றபோது வழியில் இருந்த பனை தோப்புக்குள் திடீரென அண்ணாமலை காரை நிறுத்தி சென்றார். அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த பனைத் தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தார். பின்னர் அந்த தொழிலாளர்களில் சிலர் பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கினர். அதை சுத்தம் செய்தனர். பின்னர் பனை ஓலையை அண்ணாமலையிடம் கொடுத்து அதில் பதநீரை ஊற்றினர். பதநீரை அவர் ருசித்து பருகினார். முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் ருசித்து பருகினர்.