என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி

என்.எல்.சி.க்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநகர் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் வேலை இல்லாத காரணத்தால் கலவரம், பிரச்சினைகள் உருவாகிறது. காவிரி-வைகை – தாமிரபரணி இணைப்பு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தாமிரபரணியும் வைகையாறும் மோசமான நிலையில் உள்ளது, வைகை ஆறு சாக்கடை போல உள்ளது. தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டு தோறும் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து நீர் பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தி.மு.க. தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றிவிட்டது.பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏன் தி.மு.க. அரசு செயல்படுத்தப்படவில்லை.

நெய்வேலியில் என்.எல்.சி. என்ற நிறுவனம் விளை நிலங்களை அழித்து நாசப்படுத்தி மண்ணையும் நீரையும் அழித்துக் கொண்டிருக்கிறது. என்.எல்.சி.க்கு ஆதரவு கொடுக்கும் தமிழக அரசை கண்டிக்கின்றோம். மின்சாரத்திற்கு எவ்வளவோ மாற்று வழி உள்ளது. ஆனால் சோறுக்கு மண் மட்டும் தான் உள்ளது. இதற்கு முன்பு 40 ஆயிரம் ஏக்கர் அழித்துவிட்டார்கள். தற்பொழுது 50 ஆயிரம் ஏக்கர் கேட்கிறார்கள். தி.மு.க. அரசு விவசாயிகளின் எதிரி என்பதை எல்லா விவசாயிகளும் உணர்ந்துவிட்டார்கள். என்.எல்.சி. விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலையிட வேண்டும். என்.எல்.சி.க்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அமைதியான போராட்டத்தை, காவல்துறையினர் வேண்டுமென்றே பிரச்சினையாக மாற்றி விட்டனர்.

அன்னூர் சிப்காட் நிறுவனம் கொண்டு வர 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்ட போது, தரிசு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று போராட்டம் நடத்தினார்கள். அந்த திட்டத்தை அரசு நிறுத்தி விட்டது. அங்கே சிப்காட் வந்தால் 20 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். ஏன் தடுத்து நிறுத்துனீர்கள். அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா?. சோறு போடும் நிலத்தை அழிக்காதீர்கள் என டெல்லியில் சென்று அண்ணாமலை கூற வேண்டும். டெல்லியில் சென்று வாதிட்டு என்.எல்.சி. விவகாரத்தை அண்ணாமலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பா.ம.க.வின் நோக்கம் 2026-ல் புதிய கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

என்.எல்.சி. பிரச்சினை இந்த நாட்டின் பிரச்சினை. இன்று மண்ணை அழித்துவிட்டால் நாளை சாப்பிட சோறு கிடைக்காது. இந்த நிலம் காப்பாற்றப்படும்வரை பா.ம.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். மண்ணையும், மக்களையும் காப்பாற்ற நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம். அந்த நிலங்களை விவசாயிகளுக்கே அரசு திரும்ப வழங்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்கள் மது அருந்தக்கூடாது என்று பேசி உள்ளார். அதனை நான் வரவேற்கிறேன். இவர் கூறியது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல. பொதுமக்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போதாவது தமிழக அரசு மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். அல்லது படிப்படியாக செயல்படுத்த வேண்டும். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழகத்தில் கஞ்சா கலாசாரத்தை ஒழிக்க போதிய காவலர்களை நியமிக்க வேண்டும். போதை பழக்கத்தை ஒழிக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.