கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: டிடிவி தினரகன்!

கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன், பல முக்கிய விஷயங்கள் குறித்தும் பேசினார்.

ஜெயலலிதா உயிரிழந்த பிறகு கொடநாடு பங்களாவுக்கு யாரும் பெரிதாக செல்லாத நிலையே இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த 2017இல் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. அங்கே காவலாளியாக இருந்த ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது மாநிலம் முழுக்க அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வருக்கு சொந்தமான இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது பேசுபொருளானது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. அதன் பின்னர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மர்மான முறையில் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை இப்போது சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தேனியில் ஆர்பாட்டம் நடத்தினர். இந்தக் ஆர்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:-

ஜெயலலிதா இங்கே வந்த போது இருந்தவர்களில் 90% பேர் இப்போதும் நம்முடன் தான் இருக்கிறார்கள். யாரோ ஒரு சிலர் மட்டுமே விலைபோகியுள்ளனர். இருப்பினும், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள். இங்குள்ள கூட்டம் தானாக கூடிய கூட்டம். காசு கொடுத்தோ.. பிரியாணி அல்லது டாஸ்மாக்கிற்கோ கூடிய கூட்டம் இல்லை. இவர்கள் தான் ஜெயலலிதாவின் உண்மை கூட்டம். ஜெயலலிதா மிகவும் நேசித்த இடம் கொடநாடு பங்களா. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இங்கு சென்று தங்குவார். அந்த பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்டார். கொடநாடு பங்களாவில் கொள்ளை நடந்தன. அதைத் தொடர்ந்து பல விபத்துகளும், தற்கொலை சம்பவங்களும் அரங்கேறின. இதற்கு காரணம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கில் சாட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கூட பேசினார். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார். எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விட மாட்டோம் என்றெல்லாம் கூறினார். இருப்பினும், 3 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதற்கு காரணம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த கொடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மற்றும் அமமுக தொண்டர்களும் தங்களுக்குள் இருந்த வருத்தங்களை மறந்து இன்று ஒன்றாக இணைந்துள்ளோம். இங்கே இருப்பது தொண்டர் படை.. அங்கு குண்டர் படையும் டெண்டர் படையும் தான் இருக்கிறது.

நான் அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எங்களுக்கு பொழுது போகவில்லை என்று போராட்டம் நடத்துவதாகவும் அமமுக அச்சாணி இல்லாத வண்டி என்றும் ஒருவர் கூறுகிறார். இவருக்கு அச்சாணி என்றால் என்று தெரியுமா முதலில்.. ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணி என்பது விஸ்வாசம் மிக்க தொண்டர்கள் தான். அவர்களுக்கு விஸ்வாசம் என்றால் எனனவென்றே தெரியாது. துரோகம் செய்தே பழகியவர்கள். டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள். நானும் ஓபிஎஸும் இணைந்தது சுயநலத்திற்காக இல்லை. நாங்கள் முதல்வராக வேண்டும் என இணையவில்லை. அவர் ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்தவர். நான் பதவி குறித்தே சிந்திக்காதவன் என்பது தொண்டர்களுக்கு தெரியும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வெற்றிச் சின்னமும் கட்சியும் இன்று துரோகிகள் கைகளில் உள்ளது. அதை அவர்களிடம் இருந்து மீட்டு ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களிடம் தர உள்ளோம். இதற்காக தான் நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம். எங்களுக்கு டெண்டர் ஆசை எல்லாம் இல்லை. கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும். போலீசார் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.