மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது லோக்சபாவில் ஆகஸ்ட் 8-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை விவாதம் நடைபெற உள்ளது.
மணிப்பூரில் 3 மாதங்களாக வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசு மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்பது அக்கட்சிகளின் வலியுறுத்தல். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருப்பதைக் கண்டித்தும் விளக்கம் தர கோரியும் நாடாளுமன்றத்தை கடந்த 9 நாட்களாக எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளன. இதனிடையே பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பாக காங்கிரஸின் கவுரவ் கோகாய், லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இந்த தீர்மானத்தை ஏற்பதாகவும் அறிவித்தார். ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது எப்போது விவாதம் நடைபெறும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவும் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில்தான் லோக்சபாவில் வரும் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதால் அனைத்து விவாதங்களுக்கும் ஆகஸ்ட் 10-ந் தேதி பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.