மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது; மணிப்பூர் மாநில அரசு செயலிழந்துவிட்டது என உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், நிர்வாண ஊர்வலம் தொடர்பான வீடியோ வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டது? மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்த போதும் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது, மணிப்பூர் மாநிலத்தில் எந்த ஒரு சட்ட ஒழுங்குமே இல்லை. மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் செயலிழந்துவிட்டது. மணிப்பூர் மாநில அரசு மக்களைக் காப்பாற்றவிட்டால் அந்த மக்கள் எங்கேதான் போவார்கள்? மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற மாநில போலீசாரால் முடியவில்லை. மணிப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்த முடியாமல் இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லாமல் போய்விட்டது என உச்சநீதிமன்றம் சரமாரியான கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்தது.
மேலும் பெண்கள் பலாத்கார வழக்கில் முதல் தகவல் அறிக்கையானது உடனே பதிவு செய்யப்படாமல் மிக நீண்ட காலம் தாமதமாகி இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. மணிப்பூரில் பெண் ஒருவர் காரில் இருந்து மகனுடன் இழுத்து கீழே தள்ளப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மே 4-ந் தேதி நிகழ்ந்துள்ளது. ஆனால் ஜூலை 7-ந் தேதிதான் வழக்கே பதிவு செய்திருக்கின்றனர் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் சுட்டிக்காட்டினார். அத்துடன், மணிப்பூர் மாநில அரசு இதுவரை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்றிரண்டு தவிர பெரும்பாலானவற்றில் கைது நடவடிக்கை எதனையுமே மேற்கொள்ளவும் இல்லை. முதல் தகவல் அறிக்கையே 2 மாதங்கள் கழித்து பதிவு செய்திருக்கின்றனர். விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் எதுவும் பெறவும் இல்லை எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையாக சாடினார்.
அதேபோல, தங்களிடம் ஆதரவு கேட்டு வந்த பெண்களை காவல்துறையினரே வன்முறை கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? டிஜிபி விசாரணை நடத்தினாரா? மணிப்பூர் மாநில டிஜிபி என்ன செய்கிறார்? எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டிஜிபி நேரில் ஆஜராகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்றைய விசாரணையின் போது மே 3-ந் தேதி முதல் தற்போது வரை மொத்தம் 6,532 முதல் தகவல் அறிக்கைகளை மாநில அரசு பதிவு செய்துள்ளது என மணிப்பூர் அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.