மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் புதிய படம் இம்மாத இறுதியில் துவங்குகிறது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பின்னர், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கினார். இப்படத்தை பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் பெற்று வந்தார். ஆனால், திடீரென்று இயக்குனர் மாரிசெல்வராஜ் இந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தை தொடங்கினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படம் கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது. தூத்துக்குடியில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த இவர், வறுமை பின்னணியில் இருந்தபோதிலும் ஆசிய அளவிலான கபடி வீரராக உயர்ந்துள்ளார். அர்ஜூனா விருதைப் பெற்றுள்ள அவரது வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் 1990 காலக்கட்ட பின்னணியில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.