நாடாளுமன்றத்துக்கு வருவதை எந்த காரணத்துக்காக பிரதமர் புறக்கணிக்கிறார்? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி திருச்சி சிவா கேள்வியெழுப்பியுள்ளார்.
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி, இரு அவைகளிலும் தொடங்கியது. அவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் இன்றுவரை முடங்கியுள்ளது. தற்போது மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் எப்போது நடைபெறும்? என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 8-ந்தேதி இதன் மீதான விவாதம் நடைபெறும் எனவும், விவாதத்திற்கு பிறகு வரும் 10-ந்தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல ஒன்றிய அரசு கடமைப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எங்கள் உரிமைகளை நாங்கள் உரக்கப் பேசும்போது கூச்சல் என்கின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்ப்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது. மூத்த உறுப்பினரான மல்லிகார்ஜுன கார்கேவை பேசவிடாமல் மைக் இணைப்பை துண்டிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. நாடாளுமன்றம் நடைபெறாததற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமே காரணம் அல்ல. இதுநாள் வரை எந்த பிரதமர் இத்தனை நாட்கள் அவைக்கு வராமல் இருந்திருக்கிறார்கள்?. பிரதமரின் செயல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முரணானது. இவ்வாறு அவர் கூறினார்.