மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பிடிஆர் சந்திப்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்தார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. நிர்மலா சீதாரமனுடனான சந்திப்பு குறித்த தகவலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது:-

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. வருமான வரித் தரவுகளுடன் ஏபிஐ இணைப்பைப் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதற்காக நன்றி தெரிவித்தேன். அதுமட்டும் இன்றி நான் நிதி அமைச்சராக இருந்த போதும் ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினராக இருந்த சமயத்திலும் ஒத்துழைப்பு வழங்கியதற்காக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றியை தெரிவித்தேன். மழைக்கால கூட்டத்தொடருக்கு நடுவே அவர் எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விவரங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டால் அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளை அளிப்பதை சரிபார்க்கலாம் என தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பல திட்டங்கள் குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தகவல் தொழில்நுட்ப துறையில் டிஎன்இஜிஏ மூலமாக தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து நன்றி கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.