மணிப்பூரில் பயங்கர கலவரம் நடந்து வரும் நிலையில், அதுகுறித்து பேசுவது நாட்டுக்கு நல்லது கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
மணிப்பூரில் மைத்தேயி இன மக்களுக்கும், குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக மாறியது. மூன்று மாதக்காலமாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. ராணுவம், போலீஸ், துணை ராணுவம் என படைகள் குவிக்கப்பட்டும் அங்கு கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில்தான், அங்கு குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் நிர்வாணமாக இழுத்து வரப்படும் வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குக்கி பழங்குடி மக்களுக்கு எதிராக அங்குள்ள பாஜகவினர் செயல்பட்டு வருவதாக கூறி பலருக்கும் அக்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எச். ராஜாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், “மணிப்பூர் கலவரம் குறித்து நாம் ஆழமாக சிந்தித்து பேசுவது நாட்டிற்கு நல்லது. பல ஆண்டுகளாக அங்கு இந்த பிரச்சினை நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் அங்கு 200 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மாதக்கணக்கில்தான் அங்கு வன்முறை நடந்தது. இப்போது வன்முறை எல்லாம் ஓய்ந்து பள்ளிக்கூடங்களே திறக்கப்படும் சமயத்தில், ஏதோ மே மாதம் நடந்த பழைய விஷயத்தை சமூக வலைதளத்தில் சில அரசியல்வாதிகள் பரப்புகிறார்கள். இது அமைதியை சீர்குலைக்கும் முயற்சி. எனவே, மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசுவது நாட்டின் அமைதியை கெடுக்கும்” என்றார்.