பாளையங்கோட்டை சிறையில் பாமக தொண்டர்களை சந்தித்த அன்புமணி!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று காலை பாமக தொண்டர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

என்.எல்.சி.க்கு எதிராக பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாமக தொண்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்கான சட்டப் போராட்டத்தை பாமக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் தொண்டர்களை சந்திக்க அன்புமணி ராமதாஸ் பெயரில் சிறைத்துறைக்கு மனு கொடுக்கப்பட்டு அது ஏற்கப்பட்டதை தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்றார் அன்புமணி. அவரது வருகையை ஒட்டி சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல் இன்று மதியம் மதுரை மத்திய சிறைக்கு செல்லும் அன்புமணி, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாமக தொண்டர்களையும் சந்தித்து அவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்கவுள்ளார்.

இதனிடையே பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, விவசாயிகளுக்கு துணை நிற்க தமிழக அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக நிற்பதாக விமர்சித்தார். மேலும், நெய்வேலியில் 3வது நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருப்பதற்கு முதல்வர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என வினவியுள்ளார்.