ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது!

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது “மோடி” பெயர் குறித்து ராகுல் காந்தி பேசிய வழக்கில் ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பில் பல்வேறு கருத்துக்களையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருந்தார். ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டது. ராகுல் காந்தியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கட்சிக்கு ஆதரவாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில், கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து வைத்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த மார்ச் 23 ஆம் தேதி அன்று தீர்ப்பு அளித்தது. அதில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம், தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ராகுலின் மேல் முறையீட்ட விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையை விதித்தது தொடர்பாக சரமாரி கேள்வியையும் எழுப்பியது. மேலும், ராகுல் காந்திக்கும் அறிவுரை வழங்கிய உச்ச நீதிமன்றம், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் , பேச்சுக்களில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.