மணிப்பூரில் ரிசர்வ் போலீஸ் ஆயுத கிடங்கை சூறையாடிய வன்முறை கும்பல்!

மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூரில் உள்ள ரிசர்வ் போலீஸ் ஆயுத கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து சர்வதேச நாடுகள் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் போலீஸ் ஆயுத கிடங்கை உடைத்து அதிலிருந்த நவீன துப்பாக்கிகளை வன்முறையாளர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிஷ்னுபூர் மாவட்டத்தின் மொய்ராங் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில், “ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9.45 மணிக்கு சுமார் 45 இலகுரக வாகனங்களுடன் வந்த 500 பேர் கொண்ட வன்முறை கும்பல், ஆயுத கிடங்கில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு உள்ளே நுழைந்து ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளனர். இதில் AF ரைபிள், INSAS துப்பாக்கிகள், LMG, கைத்துப்பாக்கிகள், கார்பைன்கள், டெட்டனேட்டர்கள், ஸ்பேர் பீப்பாய்கள், பிஸ்டல்கள், GF ரைபிள்கள், மோர்டார்கள், கண்ணீர்ப்புகை துப்பாக்கிகள், AMOGH கார்பைன்கள், SLR துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்ளை சம்பவத்தை தடுக்க காவல்துறையினர் 327 ரவுண்டுகள் சுட்டிருக்கின்றனர். 20 கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இதில் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். ஆனாலும் இதையும் மீறி இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோல கலவரம் தொடங்கி கடந்த மே 3ம் தேதியன்றும் இதே போல அரசு ஆயுத கிடங்கிலிருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சுமார் 4,000 துப்பாக்கிகளும் லட்சக்கணக்கான தோட்டாக்களும், வெடிபொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர். இந்த முயற்சியின் மூலம் இதுவரை 1,600 துப்பாக்கிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த மாநிலத்தின் நிலையை கண்காணிக்க வந்த அமித்ஷா ஆயுதங்களை ஒப்படைக்க வன்முறையாளர்களுக்கு கோரிக்கை வைத்தார். அதேபோல அம்மாநில முதலமைச்சரும் ஆயுதங்களை திரும்ப ஒப்படைப்பவர்கள் மீது எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் இருக்காது என்று உறுதி அளித்திருந்தார். இருப்பினும் தற்போது இந்த புதிய கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.