பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கருத்துக்கெல்லாம் பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள முடியாது என அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி இருந்தாலும். இரு கட்சிகளுக்கிடையே மேலெழும் உரசல்கள் அவ்வப்போது பெரும் சர்ச்சையாக உருவெடுக்கும். இந்நிலையில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இரு கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. முடிவு வெறும் முடிவாகவே இருக்க யதார்த்தத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக 9 எம்பி சீட்களை இந்த முறை எப்படியாவது பெற்றுவிடுவது என்று களத்தில் இறங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்க பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றை கட்சி நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ எனும் யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களே பெரிய அளவில் பங்கேற்காமல் இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தபோது அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே பங்கேற்றிருந்தார். இது பாஜக மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இத்தனைக்கும் ஆகஸ்ட் 20 மதுரை மாநாட்டுக்காக தயாரிப்பு குறித்து விவாதிக்க அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மூத்த தலைவர்கள் ராமநாதபுரம் பக்கத்தில்தான் இருந்திருக்கிறார். இருப்பினும் ஒருவர் மட்டுமே கூட்டணி கட்சியான பாஜகவின் யாத்திரை தொடக்கவிழாவில் பங்கேற்க அனுப்பி வைத்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே அதிமுக மாநாட்டுக்காக ரிக்ஷா பேரணியை செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை எங்களுக்கு “Just like” அவ்வளவு தான்! எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” என கடுப்பாக பேசியிருக்கிறாா். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. இப்படி இருக்கையில் கூட்டணி கட்சிக்குள் வார்த்தை போர் முற்றியிருப்பது இரு கட்சி தொண்டர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.