சூழல் அமைந்தால் மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’ கூட்டணி அமையும்: சசிகுமார்

சுப்ரமணியபுரம் 2 வேண்டாம் என நினைக்கிறேன். சூழல் அமைந்தால் மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’ கூட்டணி அமையும் என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகள் நிறைவையொட்டி ‘சுப்ரமணியபுரம்’ படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் முதல் காட்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெய், “இன்றைக்கு சுப்ரமணியபுரம் ரீ-ரிலீஸ் செய்துள்ளோம். இன்றைக்கு தான் முதல் நாள் ரிலீஸ் போன்ற உணர்வு திரையரங்குக்கு உள்ளே கிடைத்தது. இன்னும் இந்தப் படத்தின் மீது எல்லோரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். அந்த ஹைப் இன்னும் குறையவில்லை. நல்ல படைப்புக்கு எப்போதும் உயிர் இருக்கும் என்பதை உணரமுடிகிறது. இன்றைக்கும் அரங்கு நிறைந்த கூட்டத்தை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது” என்றார்.

சசிகுமார் பேசுகையில் கூறியதாவது:-

15 ஆண்டுகளுக்குப் பின் சுப்ரமணியபுரம் ரீ-ரிலீஸாகியுள்ளது. அன்றைக்கு எந்தெந்த சீனை பார்த்து திரையரங்குகளில் கைதட்டினார்களோ இன்றும் கூட அந்த சீன்களை பார்த்து கைதட்டுகின்றனர். 15 வருடத்துக்குப்பிறகு இப்படி கொண்டாடும் படத்தை கொடுத்துள்ளது மகிழ்ச்சி. ஆனால் அதே சமயம் பயமும் கூடியிருக்கிறது. அடுத்தடுத்த படங்களை இன்னும் தரமாக கொடுக்க வேண்டும் என்ற பயமும் பொறுப்பும் கூடியுள்ளது. முதலில் தமிழ்நாட்டில் வெளியிட நினைத்திருந்தோம். இந்தப்படம் ஏற்கனவே கேரளா, கர்நாடகாவில் 100 நாள் ஓடியுள்ளது. அவர்களும் கேட்டதால் கேரளா, கர்நாடகத்திலும் ரிலீஸ் செய்துள்ளோம். இன்றைக்கு இப்படியான ஒரு கூட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

“இப்போதெல்லாம் ஒரு வெற்றியை 3 நாட்களிலேயே கொண்டாடுகிறார்கள். நீங்கள் 15 வருடங்களுக்கு பிறகு கொண்டாடுகிறீர்கள்?” என கேட்டதற்கு, “இப்போது அதானே ட்ரெண்ட். எனக்கு ‘அயோத்தி’ தான் ஓடியது. எப்போதும் தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும். ‘ஈசன்’ படம் ஓடவில்லை என நான் ஒப்புக்கொண்டேன். எல்லாம் அவரவர் மனநிலை பொறுத்தது.

நான் சக்சஸ் பார்டியை 3 நாட்களில் கொண்டாடியதில்லை. ‘அயோத்தி’ 50 நாள் ஓடியதோ அதன் பிறகு தான் கொண்டாடினேன். இந்தப் படத்தில் எதையும் டெலிட் செய்யவில்லை. சுவாதியை கடைசியில் கொல்லுவாரா என பலரும் கேட்டனர். அது பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டுவிட்டோம். இன்றும் விரும்பி கொண்டாடும் படமாக இருக்கும் ஒரு படத்தை அப்படியே விட்டுவிடலாம் என தோன்றியது. அதனால் தான் பார்ட் 2 எடுக்கவில்லை. பரமனையும், அழகனையும் பிரிக்க வேண்டாம் என விட்டுவிட்டேன்” என்றார்.

மேலும், “அடுத்து குற்றப் பரம்பரை என்கிற வெப்சீரிஸ் எடுக்கிறேன். செப்டம்பர் மாதம் படப்பிடிப்புக்கு செல்கிறோம். சூழல் அமைந்தால் மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’ கூட்டணி அமையும். மதுரையை களமாக கொண்ட கதை ஒன்றை வைத்திருக்கிறேன். நேற்று இரவெல்லாம் தூங்கவில்லை. மனதுக்கு ரீ-ரிலீஸ் என்று இருந்தாலும் ஒரு படப்படப்போடு தான் வந்தேன்” என்றார்.