எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன்: ராகுல் காந்தி

வாய்மையே வெல்லும். எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஏஎம்சிங்வி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, “இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். ஜனநாயகம் வென்றுள்ளது. அரசியல் சாசனம் வென்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவினை நான் வரவேற்கிறேன். இது ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி மட்டும் இல்லை. இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. உண்மைக்காவும், நாட்டின் நலனுக்காவும் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று நாட்டு மக்களைச் சந்தித்துள்ளார். அவர்களின் ஆசிர்வாதங்கள் நம்முடன் உள்ளது. ராகுல் காந்தியை தகுதி இழப்பு செய்வதற்கு 24 மணி நேரமே ஆனது. இனி அவரை பதவியில் மீண்டும் அமர்த்துவதற்கு எத்தனை நாளாகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது மக்களின் வெற்றி, வாக்காளர்களின் வெற்றி, இது வயநாடு மக்களின் வெற்றி” என்று கார்கே தெரிவித்தார்

அவரைத் தொடந்து பேசிய ராகுல் காந்தி, “நன்றி கார்கே ஜி.. இன்று இல்லை என்றாலும், நாளை இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் வாய்மை வென்றே தீரும். எனது இலக்கு எனக்குத் தெரியும். நான் என்ன செய்யவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் உறுதுணையாக நின்ற, எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பொதுமக்கள் காட்டும் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி” என்று ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, ‘எது நடந்தாலும் எனது கடமை ஒன்றே.. இந்தியாவின் எண்ணத்தை பாதுகாப்பது’ என்று தெரிவித்திருந்தார்.