தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை: அன்புமணி

தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நெய்வேலி நிறுவன முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், பாதுகாப்பு கருதி பாமகவைச் சேர்ந்த 18 பேர் மதுரை மத்திய சிறைக்கும், நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சிலரும் மாற்றப்பட்டனர். இவர்களை நேரில் சந்திக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் இன்று காலை பாளையங்கோட்டை சிறைக்கு சென்று, சந்தித்தனர்.
இதன்பின், மதுரை மத்திய சிறைக்கு அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜிகே. மணி உட்பட 4 எம்எல்ஏக்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் முன் அனுமதி பெற்று, ஜெயிலர் அறையில் சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் முன்னிலையில் அவர்களை சுமார் 15 நிமிடம் சந்தித்துப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறியதாவது:-

நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது இந்திய தண்டனை சட்டம் 307, 506 உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யாரும் எந்த தப்பும் செய்யாதவர்கள். கைது செய்யபட்டவர்கள் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் கிடையாது. கடலூரில் இருந்து அவர்களை மாற்று சிறைக்கு மாற்ற என்ன காரணம்? என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை. 3-வது என்.எல்.சி. சுரங்கத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. புதிய சுரங்கம் அமைக்கும் இடம் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்திற்குள் வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் எந்தவித சுரங்கமும் தொடங்கமாட்டோம் என சொல்லிய முதலமைச்சர் என்.எல்.சி விவகாரத்தில் அமைதியாக உள்ளார்.

என்.எல்.சி. விவகாரம் மண் தொடர்பான பிரச்சனை. தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சனை. விவசாயிகள் நண்பன் என தமிழக அரசு இனி சொல்லக்கூடாது. எங்கள் கூட்டத்தின் மீது சமூக விரோதிகள் புகுந்ததன் காரணமாக தான் அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. என்.எல்.சியில் இனியும் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தான் அரசு மற்றும் காவல் துறையின் நோக்கம். 64, 750 ஏக்கர் விளைநிலங்களை என்.எல்.சிக்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. மத்திய அரசை இந்த விவகாரம் தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். நான் தனியாக இதனை செய்ய முடியாது. என்.எல்.சிக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எந்த விவசாயிக்கும் கிடையாது. நெய்வேலியில் இருந்து என்.எல்.சி. வெளியேற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அனைத்து விவகாரத்திலும் பா.ஜ.க.வை எதிர்க்கும் தி.மு.க. என்.எல்.சி.க்கு மட்டும் ஏன் ஆதரவாக இருக்கிறது.

அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைக்கட்டும். நெய்வேலி தொடர்பான போராட்டமே மத்திய, மாநில அரசுகளை கண்டித்துதான் நடக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அனைவரும் என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டும். சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதலமைச்சர் உறுதிகொடுத்தார். ஆனால் இந்த விவகாரம் நடக்கும் நிலையில் எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து எங்கள் போராட்டம் கடுமையான முறையில் நடக்கும். இந்த பிரச்சனை தேர்தலுக்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல.

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை பெரியது. சாதாரண வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு விபரம் தெரியவில்லை. ராகுல் காந்தி வழக்குக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. 2026-ல் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துத் துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.