சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும்: ப.சிதம்பரம்

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “மோடி” எனப் பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாகக் கூறி ஒரு சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார். இதை எதிர்த்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்தார். இது தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல் காந்தியின் தண்டையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக தொடர்வார்.

இதற்கிடையே இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கூறியதாவது:-

லோக்சபா சபாநாயகர் உடனடியாக ராகுல் காந்தியை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளோம். தண்டனையை ஏற்கனவே நிறுத்தியிருந்தார்கள். இப்போது கன்விக்ஷன் எனப்படும் குற்றவாளியாக அறிவித்ததையும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அதாவது தற்போது கன்விக்ஷன் இல்லை. இதில் இறுதித் தீர்ப்பு இனிமேல் வரும். இருப்பினும், இப்போது கன்விக்ஷன் இல்லை என்பதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும் அரசியல் சாசனத்தின் படியும் அவரை லோக்சபா உறுப்பினரில் இருந்து நீக்கியது இனி செல்லாது. அதை நிச்சயம் சபாநாயகர் உணர்ந்து, ராகுல் காந்தி எம்பியாக தொடர ஆணை பிறப்பிப்பார் என நம்புகிறேன்.

பாஜக ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். இந்தியக் குற்றவியல் சட்டம் 162 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தண்டனை என்பது அதில் தான் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை வாய்மொழி அவதூறுக்காக எந்தவொரு நபருக்காவது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதா? இதை நான் தொடர்ந்து கேட்டு வருகிறோம். நாங்கள் ஆராய்ந்த வரை 162 ஆண்டுகளில் இதுபோன்ற வழக்குகளில் எந்தவொரு நீதிமன்றமும் 2 ஆண்டுகள் என அதிகபட்ச தண்டனை விதித்தே இல்லை. எப்போதும் நாட்கள் அல்லது ஒரு மாதம்.. இல்லையென்றால் 5 ஆயிரம் அபராதம் என்றே தீர்ப்பு இருக்கும். 2 ஆண்டுகள் தண்டனை என்றால் அதுவே பிழை. அதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டிய காரணம் என்ன என்பதை சூரத் நீதிமன்றம் விளக்கவில்லை என்பதையும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த தீர்ப்பை இன்றோ நாளையோ சபாநாயகருக்கு அனுப்புவோம். திங்கள் கிழமை இது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் என்று நினைக்கிறேன். சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.