கோபாலபுரக் குடும்பத்தில் பிறந்ததைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் தழுவிய பாத யாத்திரை நடத்தி வருகிறார். மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு அண்ணாமலை நேற்று தனது நடைபயணத்தைத் தொடங்கினார். மேலூர் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அண்ணாமலை கூறியதாவது:-
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை கிராமங்களின் தாய் கிராமமான மேலூரில், இன்றைய தினம் ‘என் மண் என் மக்கள்’ பயணம் சிறப்புற நடந்தேறியது. தலைசிறந்த ஆன்மீக பூமி மேலூர். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். அப்படியான திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மேலூர் அருகே உள்ள திருவாதவூர். விவசாயத்திற்கு பேர் போன மேலூர் கலப்பை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இதைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் மேலூர் வி. மாணிக்கத் தேவர். இவர் உருவாக்கிய ‘போஸ் கலப்பைத் தொழிற்சாலை’, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் எளிமையான அரசியல்வாதி என்ற பெயரெடுத்த முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் அவர்களை நமக்கு தந்த ஊர் மேலூர். கக்கன் போன்ற நேர்மையான அமைச்சர்கள் அலங்கரித்த தமிழகம் இன்று ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்வதும், விசாரணையை எதிர்கொள்வதுமாக இருக்கும் அமைச்சர்களால் தனது பொலிவை இழந்து நிற்கிறது. கக்கன், காமராஜர் போன்றவர்கள் வாழ்ந்த பூமி இன்று கமிஷன் அடிப்பவர்களால் நிறைந்திருக்கிறது.
கோபாலபுரக் குடும்பத்தில் பிறந்ததைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாத உதயநிதி இன்று விளையாட்டுத்துறை அமைச்சர். அமைச்சர் உதயநிதியும், முதல்வரின் மருமகன் சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். உண்மையைச் சொன்னதால் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு, டம்மி பதவி வழங்கியுள்ளனர். தமிழ்நாடு அதிகளவு கடனில் உள்ளது. மதுபானம் ஏழை குடும்பங்களை பாதித்து வருகிறது. மதுபான கடைகளை திறப்பதால் குடிக்காதவர்கள் கூட குடிக்க நினைக்கின்றனர். பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் பயன்பெற்ற 2,30,312 பேரில் மேலூரைச் சேர்ந்த திருமதி கவிதா அவர்கள், தமிழகத்தில் வருடம் 6000 ரூபாய் பயனடையும் 46 லட்ச விவசாயிகளில் மேலூர் திருச்சுனையை சேர்ந்த ராசு அவர்கள், தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தினால் பயன்பெறும் 30 லட்ச பேரில் மேலூர் பள்ளபட்டியைச் சேர்ந்த செல்வி வித்யா அவர்கள் ஒருவர். தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்தில் 57 லட்ச புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் பயன்பெற்ற மேலூர் பள்ளபட்டியைச் சேர்ந்த திருமதி லதா அவர்கள் ஒருவர். உஜ்வாலா திட்டம் ஒன்று மற்றும் இரண்டின் கீழ் 37 லட்சம் பயனாளிகளில் ஒருவரான மேலூரைச் சேர்ந்த திருமதி கங்கா அவர்கள். இவர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் முகவரி.
விவசாயிகளுக்கு உர மானியம் 3,68,676 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஹெக்டேருக்கு ரூ.8,909 உர மானியம். 2200 ரூபாய் விலையுள்ள ஒரு மூட்டை யூரியாவுக்கு 1958 ரூபாய் மானியம் வழங்கி, விவசாயிகளுக்கு 242 ரூபாய்க்கு வழங்குகிறது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 2013-14 ஆண்டு ₹1310லிருந்து 2022- 23 ஆண்டு ரூ.2,183 ஆக, 67 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நீர்நிலை மேம்பாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதி 2971 கோடி ரூபாய். பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு 1231 கோடி ரூபாய். விவசாயத்தை மேம்படுத்த, விவசாயம் சார்ந்த தொழில் தொடங்கிட கடந்த 9 ஆண்டுகளில் மத்திய மோடி அரசு வழங்கிய நிதி 1872 கோடி ரூபாய்.
இவை அனைத்தும் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கீழ்த்தர அரசியல் செய்யும் ஒரு அரசியல்வாதி தான் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். கேரள கம்யூனிஸ்ட் அரசு மருத்துவ கழிவுகளை லாரி மூலமாக கொண்டு வந்து தமிழகத்தின் தென்காசியில் கொட்டுகிறார்கள். சு.வெங்கடேசனோ முக ஸ்டாலினோ இதற்கு எதிராக குரல் கொடுத்தார்களா? முல்லை பெரியாறு அணை 142 அடிக்கு உயர்த்த அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக இவர் குரல்கொடுத்தாரா? சென்ற ஆண்டு திமுக அரசுக்கே தெரியாமல் முல்லை பெரியாறு அணையில் இருந்து திடீரென்று தண்ணீரை திறந்து விட்டு தமிழக கிராமங்களை வெள்ளக்காடாக மாற்ற முயற்சி செய்த போது குரல் கொடுத்தாரா? இந்த கம்யூனிஸ்ட்கள் ஒரு வினோதமான பிறவிகள். கன்னியாகுமரி எல்லை வரை ராகுல் புகழ் பாடிவிட்டு, கேரளா போன பின்பு ராகுல் காந்தியைக் கேலி செய்வார்கள். மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாத வினோதமான பிறவிகள்தான் இந்த கம்யூனிஸ்ட்கள். கடந்த 18 மாதங்களில் மட்டும் 43 தூய்மை பணியாளர்கள் தமிழகத்தில் இறந்துள்ளார்கள். இதற்கு முழு பொறுப்பு முக ஸ்டாலின் மற்றும் அவருக்கு ஜால்ரா போடும் சு.வெங்கடேசன் போன்ற ஆட்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சந்தர்ப்பவாத, ஊழல் கூட்டணியைத் தோற்கடித்து, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் போது, அதில் தமிழகமும் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாயையில் அகப்பட்டு கிடக்கிறார்கள். இந்த மாயையில் அகப்பட்டு கிடக்கும் மக்களை மீட்பதே பாதயாத்திரையின் நோக்கம். தமிழ்நாட்டில் நேர்மையான மிக சிறந்த ஆற்றல் மிகுந்த அரசியல்வாதியான கக்கனை அறிமுகப்படுத்தியது மேலூர்தான். ஆனால், தற்போதுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கக்கனுக்கு நேர் எதிரானவராக உள்ளார். திமுக ஆட்சி கொள்ளையடிக்க கூடிய ஆட்சியாக உள்ளது. ஏழைக்குடும்பங்களைத்தான் டாஸ்மாக் பெரிதும் பாதிக்கிறது. மக்கள் குடிக்க வேண்டும் என்றால் கள்ளுக்கடை திறந்துவிடலாம். அமைச்சர் மூர்த்தியை பற்றி என்ன சொல்வது… மூர்த்தியை பற்றி தெரியாதவர்கள் யாருமே இல்லை. எத்தனை குவாரி உடைக்க போகிறார் என்று அவருக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உள்ளே போனது எல்லாம் சும்மாதான்.. மூர்த்திக்கு இருக்கு பாருங்க.. நான் எதாவது சொல்லி நடந்து விட்டது என்றால்.. பிறகு அண்ணாமலை சொல்லித்தான் நடந்து விட்டது என்று சொல்லி விடாதீர்கள்.. சத்தியமாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. குலதெய்வம் மீது ஆணையாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. ஆனால், நடந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.