அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ

தன்னை அரசியல் விஞ்ஞானி என்று விமர்சித்த அண்ணாமலையை அரசியல் கத்துக்குட்டி என்றும், ஒரு வருடம் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்தில் தலைவராகி இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி இடையே அவ்வப்போது லேசாக உரசல் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. டெல்லியில் உள்ள தலைமையுடன் அதிமுக இணக்கமாகவே இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே அவ்வப்போது வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சாடியிருந்தார். செல்லூர் ராஜூ கூறுகையில், “அண்ணாமலைக்கும் எங்களுக்கும் என்னங்க இருக்கு.. அண்ணாமலை மாநில தலைவர் அவ்வளவு தான்.. “ஜஸ்ட் லைக்” மற்றதை பற்றி எங்களுக்கு ஒன்னும் இல்லை. எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். என்று கூறியிருந்தார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை, யார் பேசினால் யாருக்கு பதில் சொல்லனும் என்பதற்கு தரம் இருக்கிறது. சில பேர் அரசியல் விஞ்ஞானியாக தன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை நான் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கு எந்த ஒரு லீடரின் அப்ரூவலும் தேவையில்லை. மக்களுடைய அப்ரூவல் வேண்டும். சில பேர் தங்களை அரசியல் விஞ்ஞானியாக நினைத்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை” எனக் காட்டமாக விமர்சித்தார்.

இந்த நிலையில், தன்னை அரசியல் விஞ்ஞானி என்று விமர்சித்த அண்ணாமலையை அரசியல் கத்துக்குட்டி என்றும், ஒரு வருடம் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்தில் தலைவராகி இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செல்லூர் ராஜூ கூறியதாவது:-

தேசிய கட்சியான பாஜகவில் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை அக்கட்சியின் தேசிய தலைவர்கள்தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, அமித்ஷா, ஜேபிநட்டா என்று சொன்னேன். ஆனால், அரசியல் விஞ்ஞானிக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலையை பொருத்தவரை அவர் அரசியலில் கத்துக் குட்டி என்று எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்றுள்ளார். ஆனால் நான் அப்படி கிடையாது. ஆரம்பத்தில் இருந்து அதிமுக உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியிருக்கிறேன். அதேபோல், கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அதன்பிறகு அமைச்சர் என இன்று அதிமுக அமைப்பு செயலாளராக உள்ளேன். படிப்படியாக இந்த பதவிகளுக்கு வந்தேன். 40 வருடத்திற்கும் மேலாக பொது வாழ்வில் உள்ளேன். என்னைப் பற்றியும் நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் பற்றியும் மதுரை மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும்.

அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்துவது இல்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எங்கள் மீது ஒரு துரும்பு எறிந்தால் கூட பதிலுக்கு நாங்கள் இரும்பை வீசுவோம். அதிமுகவை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன? என்பதையும் அறிந்து கொண்டு விமர்சித்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான், அதேபோல் 2 கோடி தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.