ராகுலை பார்த்து பிரதமர் மோடிக்கு பயமா?: ஜெய்ராம் ரமேஷ்!

ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்த 26 மணி நேரத்தில் எம்.பி பதவி பறிக்கப்பட்டது, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து 26 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் ஏன் அவர் எம்.பியாக தொடரலாம் என அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, நீரவ் மோடி உள்ளிட்டோரைக் குறிப்பிட்டு நாட்டில் உள்ள எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று முடிவது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, சூரத் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 4 ஆண்டு கால விசாரணைக்குப் பின்னர், கடந்த மார்ச் 23ஆம் தேதி தேதி நீதிபதி எச்.எச்.வர்மா தீர்ப்பு வழங்கினார். ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த அவர், ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி, தீர்ப்பு வந்த மறுநாளே பறிக்கப்பட்டது. மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, சில வாரங்களில் டெல்லியில் தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வீட்டையும் காலி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதற்கிடையே சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சூரத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கினார். ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். ராகுல் காந்தியின் சிறைத் தண்டனையை குஜராத் ஐகோர்ட்டும் உறுதி செய்து, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதன்படி, நேற்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், அதைத்தொடர்ந்து நிகழ்ந்த அவரது தகுதி நீக்கமும் அவருக்கு மட்டுமின்றி, அவரை தேர்வு செய்த வாக்காளர்களின் உரிமையையும் பாதிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இனி எம்.பியாக அவர் தொடர்வார். அனைத்து கூட்டத்தொடர்களிலும் பங்கேற்பார் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை இன்னும் ரத்து செய்யவில்லை.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்த 26 மணி நேரத்தில் எம்.பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து 26 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ஏன் அவர் எம்.பியாக தொடரலாம் என அறிவிக்கப்படவில்லை? மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசிவிடுவார் என பிரதமர் மோடி பயப்படுகிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.