காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டு பாஜக அஞ்சுகிறதா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவரது எம்.பி. பதவி நீக்கம் திரும்பப் பெறப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்த பிறகும், அவரது எம்.பி. பதவி நீக்கத்தை ஏன் திரும்ப பெறவில்லை? அவரை தகுதி நீக்கம் செய்யும்போது காட்டப்பட்ட அவசரம், இப்போது எங்கே போனது? நாடாளுமன்றத்தில் சகோதரர் ராகுல் காந்தியின் இருப்பைக் கண்டு பாஜக அஞ்சுகிறதா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.