மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது அதற்கான பணிகளை தொடங்கி இருக்கும் மத்திய அரசு மக்களிடமும் கருத்து கேட்டது. இதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து ஜூலை 28 ஆம் தேதி வரை கருத்துக்களை பெற்றது. மத்திய அரசு கொண்டு வரும் இந்த பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள் என ஒவ்வொரு மதத்தினரும் சில சிவில் சட்டங்களை தத்தமது மதத்தின் அடிப்படையில் பின்பற்ற அரசியலமைப்பு அதிகாரம் அளிக்கிறது. இந்த நிலையில் இதனை கலைத்து அனைத்து சட்டங்களையும் ஒன்றாக்கி பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். இதன் காரணமாக சிறுபான்மையினரின் மத சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இச்சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. சமீபத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “தேர்தல் நோக்கத்துக்காக பாஜக அரசு இந்த பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயல்கிறது. இது பெரும்பான்மைவாத நோக்கம். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒரே நாடு, ஒரே கலாச்சாரத்துக்கு கொண்டு செல்கிறது. இதனை மத்திய அரசும், மத்திய சட்ட ஆணையமும் திரும்பப்பெற வேண்டும்.” என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. அரசின் இந்த தீர்மானத்திற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு தெரிவித்தன. பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான இந்த தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேறியது.
