நெய்வேலி பகுதியில் விஷமாக மாறிய தண்ணீர், காற்று: பூவுலகின் நண்பர்கள்!

நெய்வேலியில் செயல்படும் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளதாக புவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் ஆய்வறிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டது. இந்த நிகழ்வின்போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் பகுதிகளில், 121 வீடுகள் மற்றும் 37 இடங்களில் மண் மற்றும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ என்ற பெயரில் ஆய்வறிக்கையாக வெளிடப்பட்டுள்ளன. வடக்குவெள்ளூர், தொல்காப்பியர் நகரில், குடிப்பதற்காகவும் வீட்டுத்தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்திருப்பதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, வெள்ளாளன்குளம் பகுதியில் 30 மடங்கு துத்தநாகமும், 29 மடங்கு செம்பு, 28 மடங்கு நிக்கல் தண்ணீரில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இங்குள்ள தண்ணீரில், ஃப்ளோரைடு, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சிலிகான் போன்றவற்றின் விகிதமும் அதிகரித்திருப்பதால் குடிக்க உகந்தது இல்லை என்பது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி.யைச் சுற்றி ஆய்வு செய்யப்பட்ட 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்திருந்தது. 11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மாசடைந்திருந்தது. 101 வீடுகளில் நடத்தப்பட்ட நேர்காணல் முறையிலான ஆய்வில் 89 வீடுகளில் வீட்டில் யாரோ ஒருவருக்கு சிறுநீரகம், தோல் அல்லது மூச்சுத் திணறல் சார்ந்த நோய் இருப்பது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டையில் ஐ.டி.பி.சி.எல் நடத்தி வரும் அனல்மின் நிலையத்திற்கு அருகில் இரண்டு கிராமங்களில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நீர், மண் மாதிரிகளில் 3 இடங்கள் தீவிரமான மாசடைந்திருந்தன. 2 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மாசடைந்திருந்தன. இதனால் அப்பகுதிகளில் வசிப்போருக்கு நரம்பு மண்டல பாதிப்பு, செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், விவசாய நிலம், குடிநீர் ஆதாரங்களில் அனல் மின் நிலைய கழிவுகள் சேர்ந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவாக தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-

நெய்வேலியைச் சுற்றியிருக்கும் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மர்மமான முறையில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கு வழியாக ரத்தம் வருகிறது. மேலும் சருமப் பிரச்னை, இதயப் பிரச்னை, சிறுநீரகக் கோளாறு போன்றவற்றால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். இது குறித்து மருத்துவர்களிடம் அந்தப் பகுதி மக்கள் செல்லும்போது, ‘உங்களுக்கு தூய காற்று இல்லை, தூய தண்ணீர் இல்லை. அதனால், உங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளுங்கள்’ என வலியுறுத்துகிறார்களே தவிர, இதற்கு நிரந்தர தீர்வு எதுவும் சொல்லப்படுவதில்லை. உலகளாவிய அமைப்பினால் அந்த நிலத்தடி நீர், காற்று ஆகியவை சோதிக்கப்பட்டு தெற்காசியாவிலேயே மக்கள் இனம் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்கூட இதுவரை அந்தப் பகுதி மக்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இங்கு உள்ள அனைவரும் ஆளும் அரசுடன் ஏதோ ஒரு வகையில் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் கூட மனித உரிமைகள் மீறல், சுற்றுச்சூழல் ஆபத்து, காவல்துறை அராஜகப் போக்கு என எதிலும் நாங்கள் சமரசம் செய்துகொண்டதில்லை. எனவே நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து மாவட்ட மக்களையும் ஒன்றிணைத்து, தொடர் போராட்டங்களை நடத்தத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அப்போது, ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள், இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் வகையில் உங்கள் எல்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வேல்முருகன், “நான் ராஜினாமா செய்துவிட்டால், வேல்முருகனின் குரலாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் பேசுவது? நீங்கள் எம்.எல்.ஏ ஆகி பேசுகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “நான் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால்தான், இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசி வருகிறேன். தொழில்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் என அனைவரிடமும் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்று, விவசாயிகளின் பக்கம் நிற்கிறேன். நாங்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் நீங்கள் உத்தரவாதம் தந்தால், நான் இப்போதே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்தார் வேல்முருகன்.