மார்பில் கைவைத்தும் வராத கோபம், ராகுல் முத்தத்துக்கு வருவது ஏன்?: சுவாதி மாலிவால்

தான் மார்பில் கைவைத்தபோது வராத கோபம், ராகுலின் பறக்கும் முத்தத்துக்கு மட்டும் வருவது ஏன்? என கேள்வி கேட்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கடுமையாக அட்டாக் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை ஏற்பட்டது. குக்கி மற்றும் மைத்தேயி மக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை மணிப்பூரில் மோதல் தொடர்ந்து வருகிறது. இதுபற்றி பிரதமர் மோடி நாடாளமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு தரப்பில் பதில் வரவில்லை. இதையடுத்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை பேச வைக்கும் நோக்கத்தில் இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. நேற்று முன்தினம் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. நேற்று 2வது நாளாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல் பேசி முடித்தபோது எதிர்க்கட்சி தலைவர்களை பார்த்து ‛பிளேயிங் கிஸ்’ கொடுத்து சென்றார்.

இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டவர் (ராகுல் காந்தி) வெளியேறும் முன்பு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். பெண் எம்பிக்கள் அமரும் நாடாளுமன்ற சபையில் பிளேயிங் கிஸ் கொடுத்துள்ளார். பெண் மீது வெறுப்பு கொண்ட ஆண் ஒருவரால் தான் இதுபோன்று செய்ய முடியும். நாடாளுமன்றத்தில் இதுபோன்று கண்ணியமற்ற நடத்தையை நான் இதுவரை பார்த்ததே இல்லை என விமர்சனம் செய்தார். மேலும் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் ராகுல் காந்தியின் பிளேயிங் கிஸ் விவகாரம் பற்றிய விவாதம் தொடங்கி வருகிறது. இதில் ஆதரவாகவும், எதிராகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் பிளேயிங் கிஸ் குறித்த சம்பவத்தால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாஜக எம்பியாக இருந்து கொண்டு மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பக்கத்து இருக்கையில் வைத்து கொண்டு ராகுல் காந்தியை விமர்சனம் செய்யலாமா? என்ற வகையில் சுவாதி மாலிவால் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக சுவாதி மாலிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“காற்றில் பறக்கவிடப்பட்ட ஒரு பறக்கும் முத்தம் என்பது பெரும் தீயை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனைகளை அறைக்கு அழைத்து அவர்களின் மார்பிலும், இடுப்பிலும் கைவைத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் சரண் சிங் உங்களுக்கு 2 வரிசைக்கு பின்னால் அமர்ந்துள்ளார். அவரது செயலில் உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை” என ஸ்மிருதி இரானியிடம் காட்டமாக கேட்டுள்ளார்.

அதாவது பாஜக எம்பியாக உள்ள பிரிஜ் பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்ளேன தலைவராக இருந்தார். இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் நீதிமன்ற உத்தரவில் அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது ஜாமீனில் அவர் உள்ளார். நேற்றைய லோக்சபா விவாதத்தில் ஸ்மிருதி இரானிக்கு பின்னால் பிரிஜ் பூஷன் சரண்சிங் இருந்தார். அதனை தான் குறிப்பிட்டு டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் அட்டாக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.