மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி முன்வைத்த விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்தார்.
லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய டிஆர் பாலு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு தாமதமப்படுத்துவது தொடர்பகா விமர்சித்தார். அதேபோல திமுக எம்பி கனிமொழி பேசுகையில், இந்தி திணிப்பதைவிட சிலப்பதிகாரத்தை படியுங்கள்.. உங்களுக்கு பாடம் இருக்கிறது என பாண்டியன் நெடுஞ்செழியன், கண்ணகி கதையை மேற்கோள் காட்டினார்; அதேபோல திரெளபதி கதை குறித்தும் சுட்டிக்காட்டினார். இன்று லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஆர் பாலு, கனிமொழி ஆகியோர் பேசிய ஒவ்வொன்றுக்கும் வரிக்கு வரி பதிலளித்தார். செங்கோல் குறித்து பேசுகையில், காங்கிரஸ்தான் செங்கோலை தூக்கி எறிந்து மூலையில் போட்டது- அதனை மீட்டு உரிய இடத்தில் நிலைநாட்டியவர் பிரதமர் மோடி என்றார். அத்துடன் சிலப்பதிகாரம், திராவிடத்தை மறுக்கிறது; அந்தணர் எதிர்ப்பை மறுக்கிறது என்பதற்கு ம.பொ.சி.யின் பேச்சை மேற்கோள் காட்டினார் நிர்மலா சீதாராமன்.
தமிழர் பாரம்பரியம், பண்பாடு தொடர்பாக பேசுகையில் காசி தமிழ் சங்கமம், தமிழர் புத்தாண்டு கொண்டாட்டங்களை சுட்டிக்காட்டினார். மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காட்டு மிராண்டித்தனம் என சொல்லி தடை செய்தது காங்கிரஸ்; அதனை மீட்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றார். இந்தி, சமஸ்கிருதத்தை படிக்கக் கூடாது என நீங்கள் திணிக்கிறீர்கள்; அதை வளர்க்க மற்றவர்களுக்கு அதிகாரம், திணிப்பு இருக்க கூடாதா என்றார்.
1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த கட்சி திமுக இன்று திரெளபதி கதை பற்றி பேசலாமா எனவும் அன்றைய சம்பவங்களை சுட்டிக்காட்டி விமர்சித்தார் நிர்மலா சீதாராமன்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும் என்று திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேசியபோது, வெட்கம் வெட்கம் என்று திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். மதுரை எய்ம்ஸ் குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை தருவதாக திமுக எம்.பிக்கள் புகார் தெரிவித்தனர். திமுக எம்.பி.க்கள் முழக்கத்தை அடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். தற்போது ராமநாதபுரத்தில் தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படுவதாகவும் அதில் 99 மாணவர்கள் படித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட நிதி அதிகரிப்பால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை; கூடுதல் கடனும் இல்லை. மதுரையில் ஜெய்கா கடன் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் கட்டப்படும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதமாகிறது என்று குறிப்பிட்டார். எய்ம்ஸ் கட்டப்படும் என்று நிர்மலா சீதாராமன் பேசியபோது, எப்போது எப்போது என்று திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். பிற மருத்துவமனைகளை விட தமிழகத்தில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிற எய்ம்ஸில் 750 படுக்கைகள் உள்ள நிலையில் மதுரையில் கூடுதலாக 150 படுக்கை வசதி தரப்பட உள்ளது என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சை புறக்கணித்து திமுக கூட்டணிக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், பொருளாதாரம், பணவீக்க விகிதம் தொடர்பான கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா பாதிப்பு இருந்த போதும் தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது. ஆனால் 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதார உற்பத்தி, ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
ஊழல், வாரிசு அரசியலை முன்வைத்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளனர். மாநிலங்களில் எதிர்க் கட்சிகளாக இருந்து கொண்டு “இந்தியா” கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து இடம்பெற்றுள்ளன. “மாற்றம் என்பது வார்த்தைகளால் உருவாகக் கூடாது- நடைமுறைகளின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். மக்களுக்கு கனவுகளில்தான் உங்கள் வாக்குறுதிகளைக் காட்டின. நாங்கள் அந்த கனவுகளை நிறைவேற்றி காட்டுகிறோம். 2014, 2019-ல் மக்களே ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை மேற்கொண்டிருந்தனர். அடுத்த 2024 தேர்தலிலும் இதே நிலைமைதான் இருக்கப் போகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டதைப் போல எதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரை இந்தியா என மாற்றினீர்கள்? என்ன அவசியம்?. என்றார்.
இதையடுத்து திமுக எம்பிக்கள் உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்கள் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எய்ம்ஸ் எங்கே எங்கே என்று கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து தமிழ்நாடு எம்பிக்கள் வெளியேற முற்பட்ட போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டை பத்தி நிறைய சொல்லனும் ஓடாதீங்க. இருந்து கேளுங்க என்று நிர்மலா சீத்ராமன் கூறினார். இதையடுத்து மதுரை எய்ம்ஸ் குறித்த நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.