செண்பகவல்லி அணை குறித்த திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?: அண்ணாமலை

திமுக தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தனது நண்பரான கேரள முதல்வரிடம் இது குறித்து பேசாமல் இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்றைய என் மண் என் மக்கள் பயணம் விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. தனது ஆட்சிக் காலத்தில் 12 அணைகள் கட்டி, தமிழகத்தில் விவசாயம் செழிக்கச் செய்தவர் கர்ம வீரர் காமராஜர். அவருக்குப் பிறகு, தமிழகத்தில் விவசாயம் செழிக்க பல திட்டங்கள் கொண்டு வந்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே. தமிழகத்தில் விவசாய நிலங்களில் பாசனத்தை மேம்படுத்த கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதி 2961 கோடி ரூபாய்.

நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது செண்பகவல்லி அணை. இதன் மூலம், கேரளா மற்றும் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில், இந்த அணையை இயக்க முடியாது என்று கேரள அரசு கூறிவிட்டது. திமுக இதுகுறித்து சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. தேர்தல் வாக்குறுதி எண் 84 –ல், செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றுகூறி ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தனது நண்பரான கேரள முதல்வரிடம் இது குறித்து பேசாமல் இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் கற்றவர்கள் சதவீதம் 30% ஆக உயர்ந்தது. 12,000 புதிய அரசுப் பள்ளிகளைத் திறந்தார். ஆனால் திமுக, 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்றுகூறியது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ உட்கட்டமைப்புக்கு ரூ.12,641 கோடி நிதி, கொரோனா பேரிடர் நிதி ரூ.1,395 கோடி என பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊழல் திமுக ஆட்சியில், பிரசவித்த தாய்க்கும் சேய்க்கும் படுக்கை வசதி இல்லை, அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையால் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. தினம் ஒரு துயர சம்பவம் நடந்தேறுகிறது. சட்டம் ஒழுங்கு ஒரு பக்கம் சந்தி சிரிக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில், மொத்த முத்ரா கடன் உதவி 2,02,603.94 கோடி ரூபாய். விருதுநகர் மாவட்டத்துக்கு மட்டும் வழங்கப்பட்ட முத்ரா கடன் 3,272 கோடி ரூபாய். இதன் மூலம் பலனடைந்த கிருஷ்ணமூர்த்தி, பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பலனடைந்த பிருந்தாதேவி, பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் பயனடைந்த ஜெயக்கொடி, பிரதமரின் விவசாயத்துக்கான நீர்ப்பாசன திட்டத்தில் பயன்பெற்ற கண்ணன், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பலனடைந்த காளீஸ்வரி. இவர்கள்தான் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரி.

பருத்திக்கு ஆதார விலை இரண்டு மடங்கு உயர்வு, பருப்பு ஆதார விலை 74 மடங்கு உயர்வு, ஜவுளிப் பூங்கா லட்சிய நகரம் என விருதுநகர் அறிவிப்பு, அம்ரித் திட்டத்தின் கீழ் விருதுநகர் ரயில் நிலையம் தரம் உயர்வு, மருத்துவக் கல்லூரி என, பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு விருதுநகருக்கு அதிக நலப்பணிகள் செய்துள்ளது பிரதமர் மோடி மட்டுமே.

தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாகப் புறக்கணிப்போம். ஊழலற்ற வளர்ச்சிப் பயணம் தொடர, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர வாக்களிப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் விருதுநகரில் கிறிஸ்தவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பைபிள் பரிசளித்தனர். உடனே அண்ணாமலை பைபிளை வாங்கி கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.