சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்: ஜி.வி.பிரகாஷ்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வீடு புகுந்து பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். சாதி மோதல் காரணமாக இந்த கொடூரம் அரங்கேறிய நிலையில், இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனியாண்டி. இவரது மகன் சின்னதுரை.17 வயதாகும் சின்னதுரை வள்ளியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சின்னதுரை உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் அவரை கிண்டல் செய்து தாக்கியதால் ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பள்ளி நிர்வாகம் அவனது பெற்றோரை அழைத்து சின்னதுரையை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி மீண்டும் பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஒரு வாரமாக வராததற்கு என்ன காரணம் என ஆசிரியர்கள் விசாரித்தனர். அவன் நடந்ததைச் சொல்லவும், கிண்டல் செய்து தாக்கிய மாணவர்கள் 3 பேரை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த மாணவர்கள் பள்ளி முடிந்ததும் சின்னதுரையை அழைத்து மிரட்டினர். பின்னர் இரவு 10.30 மணி அளவில் சின்னதுரை வீட்டிற்கே சென்று அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த சின்னதுரையின் 14 வயது தங்கை சந்திர செல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் ஆபத்தான நிலையில் நாங்குநேரி மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரன் சின்னத்துரை மற்றும் பேத்தி சந்திரசெல்வி இருவரும் வெட்டப்பட்ட அதிர்ச்சியில் அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்களால் அரிவாளால் வெட்டிய வழக்கில் 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், சின்னத்துரைக்கு நடந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.