காவிரி மேலாண்மை ஆணையம் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதுதொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நமக்கு இதுவரை 15.799 டிஎம்சிதான் வந்துள்ளது. 37 டிஎம்சி தண்ணீர் பாக்கி உள்ளது. இதை தீர்க்க வேண்டிய பொறுப்பு காவிரி மேலாண்மை வாரியத்திற்குதான் உண்டு. உச்ச நீதிமன்றம்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை சுதந்திர அமைப்பாக உருவாக்கியது. வெள்ள காலங்களில் தண்ணீர் சாதாரணமாக வந்துவிடும் ஆனால் வறட்சி காலங்களில் தண்ணீரை பங்கிட்டு தரும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது. ஆனால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் தனது கடமையை செய்யவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவரை போடாமல் இருந்தார்கள். நான் டெல்லி சென்று வற்புறுத்தியதால்தான் அந்த அமைப்புக்கு தலைவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஒவ்வொரு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தண்ணீர் பங்கீடு பற்றி பேசாமல் மேகதாது அணை கட்டுவது பற்றி பேசுவோம் என்கிறார்கள். இதனால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து பேசக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்.
காவிரி மேலாண்மை ஆணையம் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும். அதே வேளையில் நீர்வளத்துறை அமைச்சருக்கு வலுவாக செய்தி அனுப்பி உள்ளேன். மத்திய அரசு என்ற முறையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரி உள்ளேன்.
கேள்வி:- அணை கட்டுப்பாட்டை ஆணையமே எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே; அது சாத்தியமா?
பதில்:- எந்த அணையை யார் எடுத்தாலும் உள்ளூரில் உள்ளவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஒரு சுந்ததிர அமைப்பின் கட்டுப்பாட்டில் அணை சென்றால்தான் கீழிருக்கும் மாநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த கொள்கையை நான் வரவேற்கிறேன். ஆனால் இதை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்துவார்கள் என்பது தெரியாது.
கேள்வி:- மேட்டூர் அணையில் 20 டிஎம்சிதான் உள்ளது, அவர்கள் 4 அணைகளிலும் 250 டிஎம்சி தண்ணீரை வைத்துள்ளார்களே?
பதில்:- கபினியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. நிரம்பி வழியும் தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்கு வருகிறது. வயநாட்டில் மழை பெய்தால் நமக்கு தண்ணீர் வந்துவிடும், வந்த தண்ணீரை எல்லாம் கர்நாடகத்தினர் அணைக்கு வரவிடாமல் வேறு இடங்களுக்கு திருப்பி விட்டுவிட்டார்கள். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.