அம்பேத்கர் உருவாக்கித் தந்த இந்தியச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்ற முற்படும் செயல்பாட்டை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சங்ஹீத எனவும், இந்தியக் குற்றவியல் சட்டத்தை பாரதிய சக்ஷ்யா எனவும், இந்திய ஆதாரச்சட்டத்தை பாரதிய நாகிரிக் சக்ஷயா எனவும் மாற்றுவதற்கான சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடு பேரதிர்ச்சி தருகிறது. அம்பேத்கர் இயற்றித் தந்த சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்ற முடிவுசெய்திருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
இந்தியா, அதாவது, பாரதம் பல மாநிலங்களின் ஒன்றியமாக இருத்தல் வேண்டுமென வரையறுக்கிறது இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் முதல் உறுப்பு. இந்தியா என்பது பல தேசங்களின் ஐக்கியம்; ஒன்றியம்! பன்மைத்துவம்தான் இந்திய நாட்டின் அடிப்படை ஆதார அலகு. அதனை முற்றிலும் சிதைத்தழித்திடும் வகையில், இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக நிலைநிறுத்தத் துடிப்பது இந்தியப் பெருநாட்டின் ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் பேராபத்தாகும்.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமானதல்ல இந்தியா. இந்நாட்டின் விடுதலைக்கும், மேம்பாட்டுக்கும் பல தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து, எண்ணற்ற உயிரீகங்களைச் செய்துள்ளனர். அப்படியிருக்க, இந்திக்கு மட்டும் முதன்மைத்துவம் வழங்கும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கு இந்துராஷ்டிராவை நிலைநிறுத்தத் துடிக்கும் சதிச்செயலின் செயல்வடிவமேயாகும். இந்தித்திணிப்புக்கு எதிராக மொழிப்போர்களை நடத்தி இந்தியப் பெருநாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்த தமிழ்நாடு, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை ஒருநாளும் ஏற்காது.
தமிழைப் புகழ்ந்துப் பேசி, தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டும் பிரதமர் மோடியின் முகத்திரை இச்செயல்பாடுகளின் மூலமாக மீண்டுமொரு முறை அம்பலமாகியிருக்கிறது. இந்தியாவை ஒற்றைமயமாக்கி, ஒற்றை தேசமாக உருவாக்கத் துடிக்கும் முயற்சிகள் யாவும் இந்த நாட்டை சிதைக்க முயலும் பேராபத்தாகும். இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், எல்லா மொழிகளுக்கும் சமமான முதன்மைத்துவம் வழங்கப்பட வேண்டும். அது இல்லாது, ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்குப் பல நாடுகள் பிறக்க நேரிடும் என்பது மறுக்கவியலா நியதி.
பாகிஸ்தானில் உருது மொழியைத் திணித்து, வங்காளத்தைச் சிதைக்க முற்பட்டதால்தான், வங்களாதேசம் எனும் தனி நாடு உருவானது எனும் வரலாற்றை நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு மீண்டுமொரு முறை நினைவூட்டுகிறேன். ஆகவே, அம்பேத்கர் உருவாக்கித் தந்த இந்தியச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்ற முற்படும் செயல்பாட்டை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும், அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்திய நாட்டின் ஒற்றுமையும், இறையாண்மையும் தகர்ந்துபோகும் பேரபாயம் நிகழுமெனவும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.