பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே என்று முன்னாள் கேரள கவர்னர் பி.சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் சிைறயில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விடுதலை செய்தது. இதுகுறித்து ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையில் வசிக்கும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
மரண தண்டனை கைதிகள் பேரறிவாளன் உள்பட 6 பேர் கருணை மனுக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதனை உடனே பரிசீலித்து முடிவு எடுத்திருக்க வேண்டும். அப்போது இருந்த உள்துறை அமைச்சர் மூலம் கருணை மனுதாரர்களின் கருத்துக்களை அந்த கோப்பில் பதிவு செய்து அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் கருணை மனுதாரர்களின் மனுவானது மத்திய அரசின் உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பின்பு நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்கள். அப்போது இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் பேரறிவாளன் உள்பட 6 பேர் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தாலும் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன் படி அவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. நாங்கள் அனுப்பிய கருணை மனுக்களை இவ்வளவு நாட்கள் காலம் தாழ்த்தி முடிவெடுத்தது தவறான செயல். இதனை மேற்கோள் காட்டி வாதிட்டு இருந்தனர்.
காலதாமதத்திற்கு அப்போது இருந்த மத்திய அரசின் விளக்கம் தகுந்த காரணமாக இல்லாததால் எங்களது அமர்விற்கு வந்த பின்பு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டோம். அந்த வழக்கில் இறுதியாக நாங்கள் என்ன சொன்னோம் என்றால், கைதிகள் பல வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து இருந்ததால், மத்திய, மாநில அரசுகள் விருப்பப்பட்டால் அரசின் கொள்கைகளை ஆராய்ந்து சட்டப்படி அவர்களை விடுதலை செய்யலாம் என தெளிவாக கூறி விட்டோம். ஆனால் எந்த அரசு என்பது அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அதிலேயே கூறியுள்ளோம்.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் நமது மாநில அரசு அமைச்சரவை மூலம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விடுதலை செய்வதற்காக கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனடிப்படையில் கடந்த ஒரு வார காலமாக உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் விடுதலை அளித்து தீர்ப்பளித்துள்ளனர். எனவே 142-வது சட்டப் பிரிவின்படி தீர்ப்பளித்தது சரியே. இவ்வாறு அவர் கூறினார்.