அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுரையில் நடைபெறும் பொன்விழா மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு அதிகளவில் நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாங்குநேரி பள்ளியில் மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு வீட்டிற்கே சென்று சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது வருந்ததக்கது. மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படுத்தும் இடம் கல்விக் கூடம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு வந்த பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய தண்ணீரை மாதந்தோறும் வழங்க வேண்டும். நீர் திறந்தால்தான் கூட்டத்தில் பங்கேற்பேன் என முதலமைச்சர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். விவசாயிகள், மக்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு தான் பயன்படும். குறிப்பிட்ட காலம் வரை அணையில் இருந்து சரியான முறையில் தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சிக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு மசோதாவுக்கு கையெழுத்திடப் போவதில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளாரே என்று கேள்விக்கு, “ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதி அளித்தார். தேர்தல் அறிக்கையிலும் திமுக குறிப்பிட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து கூறி வந்தார். தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட அனுப்புவோம் என்று கூட சொல்லவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் விலக்குதான் என்று கூறினர். ஆனால், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதா?. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒன்றை பேசிவிட்டு இப்போது பிறர் மீது பழி சுமத்துகிறார் மு.க.ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கியிருப்போம். ஏன் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை கொண்டு வரவில்லையா..? அதற்கு ஒரு திராணி வேண்டும்.

காவிரி பிரச்னைக்காக பல நாட்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து முடக்கினோம். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஸ்டாலினால் ஒருநாள் நாடாளுமன்றத்தை முடக்க முடிந்ததா? இவர்களுக்கு நாட்டு மக்கள் பற்றியும் கவலையில்லை. மக்களும் இவர்களை நம்பத் தயாராக இல்லை” என்றும் குறிப்பிட்டார்.