கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை: முதல்வர் சித்தராமையா!

மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் கர்நாடத்தில் போதிய அளவில் தண்ணீர் இல்லை என்று அம்மாநில முதல் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) 22-ஆவது கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு வர வேண்டிய 37.97 டிஎம்சி நீா் பற்றாக்குறையை கா்நாடகம் வழங்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்தக் கூட்டத்திலிருந்து தமிழக நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனா்.

இதையடுத்து காவிரியில் வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்துவிட கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவிட்டது. ஆணைய உத்தரவை கர்நாடகம் பின்பற்றுகிறதா என்பது உன்னிப்பாக கவனிக்கப்படும் என தமிழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஆணைய உத்தரவுப்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு கேரளம் மற்றும் குடகில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்தும் குறைந்துள்ளது. நீர்த்தேக்கங்களில் கூடுதல் தண்ணீர் வரும்போதெல்லாம், கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு அப்படியொரு நிலை இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை. இருப்பினும், தமிழகம் தண்ணீர் திறந்துவிடக் கோரி வருகிறது. எங்கள் நிலைமையையும் ஆராய வேண்டும். துன்பத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.