பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலாவுக்கு அமித்ஷா பயணம்!

அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர்ச்சைக்குரிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலா பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார். மேலும் எல்லை பாதுகாப்பு படை கப்பல்கள், படகுகளை நிறுத்தக் கூடிய மூரிங் பிளேஸ் தளத்துக்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தின் ஒரு பகுதி ரான் ஆப் கட்ச். பல நூறு கிலோ மீட்டர் விரிந்து பரந்து கடக்கும் சதுப்பு நிலப் பகுதி. இதன் ஒரு முனைதான் இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளாக பிரிகிறது. பாகிஸ்தானுடனான மிக முக்கியமான எல்லை பிரச்சனை உள்ள சர் கிரீக் என்பது இங்குதான் இருக்கிறது. சர் கிரீக் சதுப்பு நிலப் பகுதி என்றாலும் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும் அதிகம் இருக்கக் கூடிய இடம். பாகிஸ்தானிலிருந்து கடத்தல் பொருட்கள் கொண்டுவருவதற்கும் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்குமான வாய்ப்பு உள்ள இடம். இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் உள்ள பகுதி. இந்த சர் கிரீக் அமைந்திருக்கும் கட்ச் பகுதியால்தான் 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தமே வந்தது. 1965-ம் ஆண்டு இந்த ரான் ஆப் கட்ச் பகுதியில்தான் பாகிஸ்தான் தமது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. இதன் பின்னரே இந்தியா- பாகிஸ்தான் போரும் வெடித்தது. போரின் முடிவில் குறிப்பிட்ட சர் கிரீக்கின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமானது. இதன் மற்றொரு பகுதிதான் ஹராமி நாலா. மும்பை தாக்குதலின் போது அஜ்மல் கசாப் தாம் இந்தியாவுக்குள் ஊடுருவ தேர்ந்தெடுத்தது இந்தப் பகுதியைத்தான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.

பொதுவாக நாட்டின் உள்துறை, பாதுகாப்பு அமைச்சர்கள் அதிக முறை பயணம் செய்யாத எல்லை பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த சர் கிரீக், ஹராமி நாலா பகுதிக்குதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி விசிட் அடித்துள்ளார். ஹராமி நாலாவில் எல்லைப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் மற்றும் படகுகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடிய மூரிங் பிளேஸ் (Mooring Place) எனப்படும் தளத்துக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார் அமித்ஷா. மேலும் குஜராத்தின் கட்ச்சில் பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஹராமி நாலாவுக்குச் சென்று அங்குள்ள பாதுகாப்புச் சூழல் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.