சிலப்பதிகாரம் குறித்து பெரியார் கூறியதை கனிமொழி படிக்க வேண்டும்: அண்ணாமலை

சிலப்பதிகாரம் குறித்து பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சகோதரி கனிமொழி படிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி பேசிய போது, தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா. எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது. இவ்வாறு கனிமொழி பேசியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

சகோதரி கனிமொழி அவர்கள் முதலில் பெரியாரை பற்றி படிக்க வேண்டும். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 1951 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம்தேதி சேலத்தில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோபம் கொண்ட கண்ணகி ஒரு பக்கம் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம். அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரித்துவிடுகிறதாம். இதை நம்ப முடிகிறதா. பாண்டியன் மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா. இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா என பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே பிரதமர் மோடியை சிலப்பதிகாரம் படிக்கச் சொல்ல வேண்டாம். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என நீங்கள் படியுங்கள்.

ஊழலுக்கு பிறந்தவர்கள் நீங்கள். சிறை சென்று திரும்பியவர்கள், 2ஜி முறைகேட்டில் சிக்கியவர்கள். கலைஞர் டிவியில் 3000 கோடி பணபரிவர்த்தனையில் சிக்கி சிறைக்கு சென்றவர். நீங்கள் எல்லாம் மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள். ஏதோ கருணாநிதி என்ற பெயர் இருப்பதால் மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள். நீங்கள் எல்லாம் பிரதமர் குறித்து பேசவே கூடாது. அவரை பற்றி நாடாளுமன்றத்தில் பேச எந்த தகுதியும் கிடையாது. பிரதமர் இரவும் பகலும் நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். எதை படிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் திருக்குறளை படிக்கிறார், அதனால்தான் கனியன் பூங்குன்றனாரை படிக்கிறார். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும் படிக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.