பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை திரும்ப பெற்றதால், மீண்டும் எம்பி ஆக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தடைந்தார். இன்று இரண்டாவது நாளில் ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புதிய மின் கட்டமைப்பு சேவையை அவர் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:-
பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள். அவர்களைக் குறிக்க ஆதிவாசி என்றொரு வார்த்தை இருக்கிறது. அதன் அர்த்தம் நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்பதாகும். அந்த வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஞானத்தின் அடையாளம். அது நாம் வாழும் இந்த பூமியின் மீதான புரிதலின் வெளிப்பாடு, நமது பூமி மீது நாம் கொண்டிருக்கும் உறவினை சுட்டிக்காட்டுவது. ஆதிவாசி எனும் வார்த்தை நமது பழங்குடியின சகோதர, சகோதரிகள் தான் தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள உதவுகிறது. அதனால் உண்மையான உரிமையாளர்களுக்கு நிலத்தின், வனத்தின் மீதான உரிமையை வழங்க வேண்டும். அவர்கள் விரும்பியதை செய்யும் உரிமையையும் வழங்க வேண்டும்.
இந்த மண்ணின் அசல் உரிமையாளர்கள் என்ற வகையில் உங்களின் குழந்தைகள் பொறியாளர் ஆக வேண்டுமா? மருத்துவர் அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டுமா? அல்லது தொழில் முனைவோராக வர வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதேவேளையில் வனத்தின் மீது உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. வனத்திலிருந்து விளைவிக்கும் பொருட்களுக்கான உரிமை உங்களுடையது.
ஆனால் சிலர் உங்களை ‘வனவாசி’ என்று அழைக்கிறார்கள். வனவாசி என்ற சொல், இந்தியாவின் அசல் உரிமையாளர்கள் நீங்கள் என்ற உரிமையை மறுக்கிறது. அது உங்களை கட்டுப்படுத்துகிறது. வனவாசி என்ற சொல்லின் பின்னால் இருக்கும் அர்த்தம், நீங்கள் வனத்தினுள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுருக்குகிறது. இதை ஏற்பதற்கில்லை. இந்த சொல் உங்களின் வரலாற்றை சிதைக்கிறது. உங்களின் பாரம்பரியம் மற்றும் நாட்டுடன் உங்களது உறவை சிதைக்கிறது.
ஆனால் எங்களுக்கு நீங்கள் ஆதிவாசி தான். உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்பது ஒரு பேஷன் வார்த்தையாகிவிட்டது. ஆனால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசி நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். ஆதிவாசிகளிடமிருந்து வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மட்டுமல்ல ஒருவருக்கொருவர் எப்படி அணுகுவது, எப்படி மதிப்பது என்பதைக் கூட கற்றுக் கொள்ள முடியும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கல்பெட்டா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
4 மாதங்களுக்கு பிறகு இங்கு வந்துள்ளேன்.. உங்கள் எம்.பி.யாக வயநாடுக்கு வந்துள்ளேன். திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் உம்மன் சாண்டியை இங்கு காணவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர் கேரளாவின் தலைவராக இருந்தவர். அவரது இறுதி ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றது அவர் மீது கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் காட்டியது. கேரளாவுக்காக அவர் செய்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். என்னை தகுதி நீக்கம் செய்ய பாரதிய ஜனதா 100 முறை முயன்றாலும், மோடி மற்றும் அவரது கூட்டாளிகளின் திட்டம் பலிக்காது. இந்தியாவின் நோக்கமே மக்களிடம் அமைதியை நிலைநாட்டுவது தான். வன்முறையும் வெறுப்பும் இருந்தால் அது இந்தியா அல்ல. பாராளுமன்றத்தில் அவர் (மோடி) 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். சிரித்தார்.. கேலி செய்தார்.. அவரது அமைச்சரவை சிரித்தது.. ஆனால் அதில் மணிப்பூர் பற்றி பேசியது 2 நிமிடங்கள் தான். மணிப்பூரில் பாரதிய ஜனதாவும் அதன் தலைமையிலான அரசும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்றுவிட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அழித்துவிட்டீர்கள். ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் செய்ய அனுமதித்தீர்கள். அங்கு அப்படி நடந்த பிறகு நாட்டின் பிரதமராக நீங்கள் சிரிக்கிறீர்களா? இந்தியா என்ற கருத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக இருக்க முடியாது.
பாரத மாதா கொலையை பற்றி 2 நிமிடம் பேசினீர்கள். இந்தியா என்ற எண்ணத்தை எப்படி நிராகரிக்க முடியும்?. மணிப்பூருக்கு நான் சென்ற போது, எங்கும் ரத்தம்.., எங்கும் கொலை .. எங்கும் பாலியல் பலாத்காரங்கள் என மக்கள் கூறினர். இது தான் மணிப்பூரின் நிலவரம். கடந்த 4 மாதங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் மணிப்பூர் செல்லவில்லை? ஏன் வன்முறையைத் தடுக்க முயற்சிக்கவில்லை? ஏனென்றால் நீங்கள் ஒரு தேசியவாதி இல்லை. இந்தியா என்ற எண்ணத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக முடியாது.
வயநாட்டுக்கு நான் வந்திருக்கிறேன். இப்போது நான் என் குடும்பத்திற்கு வந்திருக்கிறேன். யாரோ ஒருவர் நம் குடும்ப உறுப்பினர்களை பிரிக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒருவர் இரண்டு சகோதரர்களை ஒருவரையொருவர் பிரிக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒரு தந்தையை தனது மகளிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், யாராவது ஒரு குடும்பத்தை பிரிக்க முயன்றால், குடும்பம் வலுவடைகிறது; ஒருவன் தந்தையையும், மகனையும் பிரிக்க முயன்றால், தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவு வலுவடைகிறது.. தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான அன்பு வலுவடைகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு குடும்பம் என்றால் என்ன என்று புரியவில்லை. நாட்டை அழிப்பதே அவர்களது நோக்கம். இந்தியா ஒரு குடும்பம்.. பிரித்தெடுக்க நினைக்கிறார்கள்; மணிப்பூர் ஒரு குடும்பமாக இருந்தது. அதை அழிக்க முயன்றார்கள்.. மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பா.ஜ.க.வின் கொள்கைகளால் அழிக்கப்பட்டுள்ளன. அதனால், அவர்கள் அழிக்கிறார்கள். அவை மக்களிடையேயான உறவை அழிக்கின்றன, நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம், குடும்பங்களை பலப்படுத்துகிறோம், மக்களிடையேயான உறவை பலப்படுத்துகிறோம்.
உங்களையும் என்னையும் எவ்வளவு அதிகமாக பிரிக்க முயல்கிறார்களோ, அவ்வளவு நெருக்கமாகி விடுவோம் என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் நினைக்கிறார்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், வயநாட்டுடனான அவரது உறவு முறிந்துவிடும். இல்லை! நீங்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், அவருடைய உறவு. வயநாடு மேலும் வலுவடையும், வயநாட்டு மக்கள் மீதான அவரது அன்பு மேலும் வலுவடையும், மேலும் வயநாட்டு மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மேலும் வலுவடையும். இவ்வாறு அவர் பேசினார்.