தூத்துக்குடியில் சலூனில் மினி நூலகம் அமைத்து பிரதமர் மோடியால் பாராட்டு பெற்றவரின் கடைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சென்று பாராட்டிய நிலையில் இருக்கை வாங்க ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்து உதவியதோடு, 100 புத்தகங்களை தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 234 சட்டசபை தொகுதிகளிலும் நடைப்பயணத்தை தொடங்கி உள்ளார். ‛என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைப்பயணம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். அண்ணாமலையின் இந்த நடைப்பயணம் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தூத்துக்குடியை அடைந்துள்ளது.
இந்நிலையில் தான் அண்ணாமலை தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள பொன் மாரியப்பன் என்பவரின் சலூன் கடைக்கு சென்றார். இந்த பொன் மாரியப்பன் தனது சலூன் கடையில் மினி நூலகத்தை அமைத்துள்ளார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும்போது புத்தகங்களை படிக்கும் வகையில் இந்த நூலகத்தை அவர் அமைத்துள்ளார். இதனால் அவரது சலூன் கடை மிகவும் பிரபலமானதாக உள்ளது. பிரதமர் மோடியும் ‛மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பொன் மாரியப்பன் சலூன் கடையை பாராட்டி இருந்தார். அதேபோல் ஆளுநர் ஆர்என் ரவியும் அவரை பாராட்டியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று அண்ணாமலை அவரது கடைக்கு சென்று பாராட்டினார். இந்த வேளையில் சலூன் கடையில் இருந்த இருக்கையை பற்றி அண்ணாமலை கேட்டார். அப்போது, பொன் மாரியப்பன், ‛‛தனது வருமானத்தை புத்தகம் வாங்க செலவு செய்கிறேன். இதனால் புதிதாக இருக்கை வாங்க முடியவில்லை” என்றார். இதை கேட்ட அண்ணாமலை புதிதாக சேர் வாங்க ரூ.20 ஆயிரத்தை எடுத்து வழங்கினார். மேலும் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருக்கும் 100 புத்தகங்களை சலூன் கடைக்கு அன்பளிப்பாக தருவதாக கூறினார். நடைப்பயணத்தின் ஓய்வு நாளான 22ம் தேதி சென்னை சென்று தானே 100 புத்தகங்களை தேர்வு செய்து பார்சல் செய்து 2 நாளில் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். மேலும் சலூன் கடையில் நூலகம் அமைக்கும் ஐடியா எப்படி வந்தது? என்பது பற்றி அண்ணாமலை பொன் மாரியப்பனிடம் கேட்டார்.
அதற்கு அவர், ‛‛எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. இருப்பினும் என்னால் அதிகமாக படிக்க முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்களை புத்தக வாசிப்பாளராக மாற்ற வேண்டும் என்ற முறையில் நூலகத்தை அமைத்துள்ளேன்” என தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அண்ணாமலை, ‛‛தூத்துக்குடியில் இன்று என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது பொன் மாரியப்பனை சந்தித்தில் மகிழ்ச்சி. 2020 அக்டோபரில் பிரதமர் மோடி மன்கிபாத்தில் அவர் பற்றி பேசியிருந்தார். பொன் மாணிக்கவேல் வாடிக்கையாளர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார். அதன்படி சலூனில் நூலகம் அமைத்துள்ளார். இங்கு புத்தகம் படிப்பவர்களுக்கு ரூ.30 தள்ளுபடி செய்து கொடுகிறார். என் சார்பாக அவரது நூலகத்துக்கு 100 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு பாஜக சார்பில் புதிய ஹைடெக் சேர் வாங்க ரூ.20 வழங்கி மகிழ்ச்சி அடைந்தோம்” என தெரிவித்துள்ளார்.