சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை கிழிப்பு: திருநாவுக்கரசர் விளக்கம்!

1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அப்போதைய அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த இன்றைய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விவரித்துள்ளார்.

இது தொடர்பாக திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

1989-ம் ஆண்டு ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் நடந்தது. அப்போது, தற்போதைய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சட்டசபையில் காங்கிரஸ் தலைவராக மூப்பனாரும் துணைத் தலைவராக தமிழிசையின் தந்தை இருந்தார். அவருக்கு வேண்டுமானால் தமிழிசை உதவியாக இருந்திருக்கலாம்.

1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அவருக்கு ஏதோ நடக்கப் போகிறது என்கிற தகவல் முன்கூட்டியே கிடைத்திருக்கலாம். அதனால் வழக்கமாக படிப்பதைப் போல இல்லாமல் டேபிள் மீது சிறிய ஸ்டூல் போட்டு அதன் மீது பட்ஜெட் காபியை வைத்து படித்தார் கருணாநிதி.

முன்னதாக 26 எம்.எல்.ஏக்களுடன் ஜெயலலிதா போயஸ் கார்டனில் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜெயலலிதா பிரதான எதிர்க்கட்சித் தலைவர். நான் துணைத் தலைவர். 26 எம்.எல்.ஏக்கள் அப்போது இருந்தோம். பின்னர் இடைத்தேர்தல்களில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள் கூடியிருக்கலாம். அந்த கூட்டத்தில் கருணாநிதி, பட்ஜெட்டை படிக்க விடாமல் டிஸ்டர்ப் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. கருணாநிதி பட்ஜெட்டை படிக்கவிடாமல் ஏன் தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு முன்னதாக, சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில் ஜெயலலிதா, தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸ் பறிமுதல் செய்திருந்தது. அப்போது பெரிய பிரச்சனையாக அது இருந்தது. போலீஸை துஷ்பிரயோகம் செய்றீங்கன்னு ஒரு காரணத்தை சொல்லி குழப்பம் பண்ணனும், தடுக்கனும்னு சொல்லி ஜெயலலிதா சொன்னதால முடிவெடுத்தோம்.

கருணாநிதி பட்ஜெட்டை வாசிக்க தொடங்கியதும் பின்னால் இருந்த எம்.எல்.ஏ. ஒருவர், கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் பேப்பரை பிடித்து இழுத்தார். அப்ப கருணாநிதி, ஏய்னு சத்தம் போட்டபடி தலையை திருப்பினார்.. அதனால் அவர் கண்ணாடி கழன்று விழுந்தது. கருணாநிதி தடுமாறினார். அதுக்கு பின்னாடி அவருக்கு பின்னாடி இருந்த சீனியர் மினிஸ்டர்ஸ் எல்லாம் கருணாநிதியை அழைச்சுட்டு போய்ட்டாங்க.. பின்னால் இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைச்சாங்கன்னா, கருணாநிதி முகத்தில குத்திட்டாங்கன்னு நினைச்சாங்க. அதனாலதான் தடுமாறினாருன்னுதான் நினைச்சாங்க.. அப்படிதான் தகவல் பரவுச்சு.. அதனால டேபிள் மீது இருந்த பட்ஜெட் காபி, புத்தகங்களை திமுக எம்.எல்.ஏக்கள் எடுத்து வீச களேபரமாகிவிட்டது. நாற்காலி எல்லாம் எடுத்து அடிக்க முடியாது. ஏனெனில் அந்த நாற்காலிகள் எல்லாம் பிக்சட். சோபாவை எல்லாம் தூக்கி அடிக்கவா முடியும்? சில பேர் மைக் கழற்றிகிட்டு இருந்தாங்க.. அது எல்லாம் ஜெயலலிதா மீது விழாம இருக்கனும்னு அவருக்கு பாதுகாப்பா நான் நிற்கிறேன். பின்னாடி கேகேஎஸ்எஸ்ஆர் நின்னாரு.. அப்படி இருந்தும் சில புத்தகங்கள் ஜெயலலிதா தலையில் விழுந்தது. ஆனால் முக்கால்வாசி புத்தகம் என் தலையில்தான் விழுந்தது. அதனால் ஜெயலலிதா தலை கலைந்தது உண்மை. அதாவது புத்தகம் விழுந்ததால் ஜெயலலிதா தலை கலைந்தது உண்மை. உடனே ஜெயலலிதாவை எழுந்திருங்க போகலாம்னு சொல்லி காரில் ஏற்றி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். ஆக சட்டசபையில் சம்பவம், சண்டை நடந்தது எல்லாம் உண்மைதான். அடிதடின்னா காயம் ஏற்படுற அளவுக்கு எல்லாம் இல்லை. இதுதான் நடந்தது.

ஆனால் கருணாநிதி முகத்தில் குத்திட்டாங்கன்னு திமுக பிரசாரம் செய்தது; ஜெயலலிதா சேலையை பிடிச்சு இழுத்திட்டாங்கன்னு அண்ணா திமுக பிரசாரம் செய்தது. இந்த இரண்டுமே உண்மை இல்லை. கருணாநிதி முகத்தில் குத்தவும் இல்லை. ஜெயலலிதா சேலையை பிடிச்சு இழுக்கவும் கிடையாது என்பதுதான் உண்மை. இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.