மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மணிப்பூர் பிரச்சினை குறித்து பேசியதால் குழப்பம் நிலவியது. இரு அவைகளிலும் மாநில அதிகாரங்களின் உரிமைகளில் தலையிடும் மசோதாவை எதிர்த்த விவாதத்தில் திமுக பங்கேற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் பங்கேற்றோம். மற்ற நாட்களில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினோம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பல மசோதாக்களை குழப்பங்களுக்கிடையில் நிறைவேற்றினர்.
மணிப்பூரில் 100 நாட்களுக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேர் நிவாரண முகாம்களிலும், காடுகளிலும் பதுங்கி வாழ்கின்றனர். இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், 230 பேர் காடுகளில், மியான்மர் எல்லையில் தவிக்கின்றனர். உள்ளூர் மக்கள் துணையுடன் காலம் தள்ளுகின்றனர்.
இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எந்த விளக்கமும் தரவில்லை. இண்டியா கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையாக இணைந்துள்ளோம். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அறிக்கை தரவேண்டும், குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், பிரதமர் அவைக்கு வர மறுத்தார். உள்துறை அமைச்சர் வருவார் என்றனர். இதை நாங்கள் ஏற்கவில்லை. மணிப்பூர் குறித்து பிரதமர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஒரே நாளில் ஒரு மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறிய சரித்திரம் இதுவரை இல்லை. 42 சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குற்றங்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. தபால் அதிகாரி, மற்றொருவருக்கு வந்த பார்சலைப் பிரிப்பது தவறில்லை என்று கூறியுள்ளார்கள்.
நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற வேண்டும். ஆனால், அதை நீர்த்துப் போகச் செய்தனர். எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டினர். மணிப்பூரில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, திமுகவை குறிவைக்கின்றனர். மணிப்பூர் மக்களுக்கு, பொறுப்புள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கின்றன. ஆனால், ஆளும் கட்சியோ, பிரதமரோ பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை.
டெல்லி மசோதா மூலம், அங்குள்ள முதல்வருக்கு அதிகாரிகள் கட்டுப்பட மாட்டார்கள் என்று சட்டம் இயற்றிவிட்டனர். நியமிக்கப்பட்டவர், தேர்வு செய்யப்பட்டவரைத் தாண்டும் அதிகாரம் உள்ளது. எங்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த விஷயத்தைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நடந்தது எதுவுமே தெரியாது. அவர் நேரடியாக எதையுமே பார்க்கவில்லை. அன்று ஜெயலலிதா அருகில் இருந்த திருநாவுக்கரசர் எம்.பி. சாத்தூர் ராமச்சந்திரனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நிர்மலா சீதாராமன் அரசியலுக்காகப் பேசுகிறார். இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. கூறினார்.