தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா என தெரியவில்லை என்று விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டை குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் போட்டோகிராபர் செல்வசேகர். இவர் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19). சிபிஎஸ்இ பிரிவில் பிளஸ் 2 படித்த ஜெகதீஸ்வரனுக்கு மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த 2 வருடமாக அவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் இரண்டு முறையும் அவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. பிரபல பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கான பணம் கட்டி படித்து வந்த அவர், இந்த முறை 400 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். ஆனால் போதிய மதிப்பெண் இல்லாததால் அரசு மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை. தனியார் கல்லூரியில் சேரவும் லட்சக்கணக்கில் பணம் இல்லாததால் அவர் மனம் உடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. மிகுந்த மன வேதனையில் இருந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படிக்கும் அறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே மகனை பறிகொடுத்த சோகத்தில் தவித்து வந்த தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரை பறிகொடுத்த சோகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஜெகதீஸ்வரன், செல்வசேகர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேரில் உறவினர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்கள் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா என தெரியவில்லை. ஆளுநர் தன் பிடிவாதத்தை தளர்த்தி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தந்து சட்டமாக்க வேண்டும். நீட் தேர்வு ஒரு குடும்பத்தில் தந்தை, மகனை பலி வாங்கியிருக்கிறது என்று தெரிவித்தார்.