ஒரு கொலைகாரனின் பேச்சுக்கு செத்தவன் தான் கைதட்டுவான்: பிரகாஷ்ராஜ்!

மன்னிக்கவும்.. தேசம் அழும் போது நான் எப்படி உங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்? ஒரு கொலைகாரனின் பேச்சுக்கு செத்தவன் தான் கைதட்டுவான்.. ஆனால் நான் சாகவில்லை.. என்னால் உங்களது கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசிற்கு எதிராகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் பொதுவெளியிலும் சமூகவலைதளங்களிலும் மிகவும் காட்டமான கருத்துக்களை முன் வைத்து வருகிறார். இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கை என்ன என்பதை சுட்டிக்காட்டியும், சூழ்நிலை இப்படி இருக்க பிரதமர் கூறியபடி சுதந்திர தினத்தை தாங்கள் எப்படி கொண்டாடமுடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளதாவது:-

மன்னிக்கவும்.. என்னால் உங்களது கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள முடியாது. வீட்டில் இறந்தவர்களை புதைக்க காத்திருக்கும் போது, கொள்ளையர்களின் ஊர்வலம் என்னுடைய வீட்டின் முற்றம் வழியாகச் செல்லும் போது, என்னால் உங்களுடைய கொண்டாட்டத்தில் ஈடுபட முடியாது. ஒவ்வொரு வீடும் சுடுகாடாய் கிடக்கும் போது நீங்கள் கொடிகளை ஏற்ற முடியுமா? புல்டோசர்கள் தேசபக்தியைத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

மன்னிக்கவும்.. தேசம் அழும் போது நான் எப்படி உங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்? ஒரு கொலைகாரனின் பேச்சுக்கு செத்தவன் தான் கைதட்டுவான்.. ஆனால் நான் சாகவில்லை.. என்னால் உங்களது கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவில் தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி “தியேட்டர் வசனம், சினிமா மற்றும் சமூகம்” என்ற தலைப்பில் அக்கல்லூரிக்குள் உள்ள நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது. இந்த நிலையில் தனியார் கல்லூரியில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை முன்வைத்த அங்கிருந்த சில மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் உள்ளே நுழையாமல் இருக்க கல்லூரிக்கு வெளியே தடுப்புகள் போடப்பட்டதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கல்லூரியின் கண்காணிப்பாளர், போராட்டம் நடத்துபவர்களில் மாணவர்களோடு வெளியில் இருந்து சில நபர்களும் கலந்துள்ளதாக கூறினார். அதனைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜ் கலந்து கொண்ட அந்த அரங்கில் சில மாணவர்கள் கோமியம் தெளித்து சுத்தம் செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.