அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக்கூடாது. திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை வைத்துள்ளனர். இது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆகஸ்ட் 20-ம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
மதுரையில் நடக்கும் அதிமுக மாநாடு ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு 10 லட்சம் பேர் வருகை தரவுள்ள நிலையில், 40 ஆயிரம் வாகனங்கள் வரவுள்ளது. இதையெல்லாம் திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது தொடர்பான தகவலை உளவுத் துறையிடம் முதல்வர் உறுதி செய்த நிலையில், இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மாநாடு நெருங்க நெருங்க நிர்பந்தம் கொடுப்பார்கள். பிளக்ஸ் பேனர்கள் வைக்க முடியவில்லை. ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்தால் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதிமுகவினர் பேனர்கள் வைத்தால், வழக்குப் பதிந்து அதை அகற்றிவிடுகின்றனர்.
பொள்ளாச்சியில் பலூன் பறக்கவிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல நிர்பந்தங்கள் கொடுக்கப்படுகிறது. எனவே, அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக் கூடாது; திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை வைத்துள்ளனர். இது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சி.
ஏன் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை 19 அல்லது 21-ம் தேதிகளில் நடத்துங்கள். எதற்காக ஆகஸ் 20-ம் தேதியை தேர்வு செய்தீர்கள்? திமுகவுக்கு தூக்கத்தில்கூட சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக இயக்கம்தான். உங்களை தூங்க விடாமல் செய்வது அதிமுகதான். நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு கொஞ்சம்கூட தகுதியில்லை. குரோம்பேட்டையில் நீட் தேர்வால் நிகழ்ந்த சோகமான சம்பவத்துக்கு நேரில் சென்றபோது உதயநிதியிடம் மக்களும், மாணவர்களும் கேள்வி கேட்டார்களா, இல்லையா?
தேர்தல் வந்துவிட்டால் போதும், உடனடியாக முதல்வர் வாய்திறந்துவிடுவார். நீட் என்ற சுவர் தகர்க்கப்படும் என்கிறார். எப்போது தகர்க்கப்படும்? கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று இப்போது சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் இம்மாதம் 20-ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.