முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.
மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் கனகசபாபதி, பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் ரெங்கன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் 152 அடி வரை நீர் தேக்க முடியும். ஆனால் கேரள அரசின் நிர்பந்தம் காரணமாக 152 அடி வரை தண்ணீர் தேக்க முடியவில்லை.
தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவும், அணையை பலப்படுத்தவும் வேண்டும். இதற்காக தமிழக பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறது. தமிழக பொதுப் பணித்துறை பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணையை வல்லக்கடவு நிலப்பாதை வழியாகச் செல்வதற்கு கேரள அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர்.
1886ம் ஆண்டின் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்த அடிப்படையில் அணையை பராமரிக்க கேரள அரசின் அனுமதி தேவையில்லை. எனவே, தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணையை வல்லக்கடவு நிலப் பாதை வழியாகச் சென்றடைந்து அணையை வலுப்படுத்தவும், அணையை பராமரிப்பு பணிக்கு தேவையான 23 மரங்களை வெட்டவும், பேபி அணையை பழுது பார்க்கவும், பலப்படுத்தவும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பெற 2வது சுரங்கம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ”முல்லைப் பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால் உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என பல உத்தரவுகள் உள்ளன. மேலும், இதே கோரிக்கை தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.