ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் ரஜினி சந்திப்பு!

இமயமலைக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த், திடீரென ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்று அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசி உள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சரவணன், யோகி பாபு, விநாயகன், ரெட்டின் கிங்ஸ்லி, என பலர் நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்து உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டாகி உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது. இப்படத்தில் ஜாக்கி ஷெராப், மோகன் லால், சிவராஜ் குமார் என பல மொழி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருப்பதால் பிற மாநிலங்களிலும் இப்படம் பட்டையை கிளப்பி உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமாக ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இமய மலையில் தியானம் செய்வதற்காக புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்கிறேன். ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.

பாபாவின் தீவிர பக்தரான ரஜினிகாந்த் இமயமலைக்கு அடிக்கடி தியானம் செய்வதற்காக செல்வது வழக்கம். கடந்த 2010 ஆம் ஆண்டு வரை தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும்போது இமய மலைக்கு அவர் பயணிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக அவர் இமய மலை செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் ரஜினி இமயமலையில் தியானத்துக்கு சென்ற சமயத்தில் ஜெயிலர் படம் வெற்றி என்ற நற்செய்தி கேட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த நிலையில் இமயமலை பயணத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த், நேராக இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு ஆளுநராக உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை ஆளுநர் மாளிகையில் சந்தித்த அவர், ஆளுநரின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணன், “ராஞ்சி வந்துள்ள இந்தியாவின் தலைசிறந்த நடிகரும் மனிதநேயரும், சூப்பர் ஸ்டாருமான என்னுடைய அன்பு நண்பர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.” என்று குறிப்பிட்டு உள்ளார்.